நாங்கூரில் கிராம மக்கள் எதிர்ப்பையும் மீறி எரிவாயு குழாய் பதிக்கும் பணி தொடக்கம்

நாகை மாவட்டம், நாங்கூர் பகுதியில் கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி, கெயில் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியது.
நாகை மாவட்டம்,  நாங்கூரில் எரிவாயு குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்ட கெயில் நிறுவன ஊழியர்கள். 
நாகை மாவட்டம்,  நாங்கூரில் எரிவாயு குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்ட கெயில் நிறுவன ஊழியர்கள். 

நாகை மாவட்டம், நாங்கூர் பகுதியில் கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி, கெயில் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியது.
 சீர்காழி வட்டம், பழையபாளையம் கிராமத்தில் இயற்கை எரிவாயு எண்ணெய்க் கிணறு உள்ளது. இதிலிருந்து பெறப்படும் எரிவாயுவை செம்பனார்கோவில் அருகே மேமாத்தூரில்  உள்ள எரிவாயு சேமிப்புக் கிடங்கில் சேமிக்கும் வகையில், பழையபாளையம் முதல் மேமாத்தூர் வரை சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் விளைநிலங்கள் வழியாக சுமார் 29 கி. மீ. தொலைவுக்கு எரிவாயுவை கொண்டு செல்லும் வகையில்  ராட்சதக் குழாய்கள் பதிக்கும் பணி கெயில் நிறுவனத்தின்  சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு, சில இடங்களில் விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், வேட்டங்குடி, திருநகரி, கீழசட்டநாதபுரம், திருவாலி, நாங்கூர் வழியாக குழாய் பதிக்கப்பட்டுவந்த நிலையில், நாங்கூர் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இத்திட்டத்தால் தங்கள் பகுதியில் பாதிப்பு ஏற்படும் எனக் கூறி கடந்த 13-ஆம் தேதி குழாய் பதிக்கும் பணியை  தடுத்து நிறுத்தினர். 
 இப்பிரச்னை தொடர்பாக, சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நாங்கூர் பகுதி விவசாயிகள், கெயில் நிறுவனத்தினர் மற்றும் வருவாய்த் துறையினருக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை புதன்கிழமை நடைபெற்றது. இதில், விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால், அவர்கள் பேச்சுவார்த்தையைப் புறக்கணித்து, வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், நாங்கூர் கிராமத்துக்கு  வியாழக்கிழமை வந்த கெயில் நிறுவனப் பணியாளர்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குழாய் பதிக்கும் பணியைத் தொடங்கினர். பிரச்னை ஏற்படாமலிருக்க  சீர்காழி காவல் துணைக் கண்காணிப்பாளர் வந்தனா, காவல் ஆய்வாளர்கள் செல்வம், சுப்பிரியா ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 
இதனால்,  நாங்கூர் பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது. இதுகுறித்து, விவசாயிகள் கூறும்போது, " எங்களது கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல், குழாய் பதிக்கும் பணியை தொடங்கியுள்ளது வேதனையளிக்கிறது. இதை எதிர்த்து சட்ட ரீதியாகப் போராட உள்ளோம்' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com