
பிரதமர் மோடி ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக புதுவை முதல்வர் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்ற புதுவை பிரதேச காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: பிரதமர் மோடி ஆட்சியில் நாட்டுக்கு பாதுகாப்பு இல்லை. குறிப்பாக, சிறுபான்மையினருக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள்தான் பாதுகாப்பாக உள்ளன. இவற்றுக்கு மக்களவைத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
மக்களவைத் தேர்தலில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டது போல, வருகிற 2021-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார் அவர். கூட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் தேசிய செயலரும், புதுவை காங்கிரஸ் பொறுப்பாளருமான சஞ்சய் தத் முன்னிலை வகித்தார். புதுவை காங்கிரஸ் தலைவர் ஆ.நமச்சிவாயம் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் சிறப்பாகப் பணியாற்றிய அனைத்து நிர்வாகிகளுக்கும் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வெ.வைத்திலிங்கம் நன்றி தெரிவித்தார்.