ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை: செவிலியர், கணவர் கைது

நாமக்கல் மாவட்டம்,  ராசிபுரத்தில் விருப்ப ஓய்வுபெற்ற அரசு மருத்துவமனை செவிலியர் ஒருவர்,  குழந்தைகளை லட்சக்கணக்கில் விலை பேசி விற்பனை செய்யும் கட்செவி (வாட்ஸ்அப்)  ஒலி நாடா புதன்கிழமை வெளியானது.
ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை: செவிலியர், கணவர் கைது
Updated on
2 min read

நாமக்கல் மாவட்டம்,  ராசிபுரத்தில் விருப்ப ஓய்வுபெற்ற அரசு மருத்துவமனை செவிலியர் ஒருவர்,  குழந்தைகளை லட்சக்கணக்கில் விலை பேசி விற்பனை செய்யும் கட்செவி (வாட்ஸ்அப்)  ஒலி நாடா புதன்கிழமை வெளியானது.

இதுதொடர்பாக, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, அந்த செவிலியர் மற்றும் அவரது கணவரை வியாழக்கிழமை கைது செய்தனர்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளைத் திருடி பணத்துக்கு விற்பனை செய்யும் சம்பவங்கள் ஆங்காங்கே நடப்பதுண்டு.  ஆனால், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என லட்சக்கணக்கில் விலை பேசி பெண் ஒருவர் விற்பனை செய்வது போன்ற கட்செவி (வாட்ஸ்அப்)  ஒலி நாடா புதன்கிழமை இரவில் வெளியானது.  அதில் பேசும் அந்தப் பெண்,  தருமபுரியைச் சேர்ந்த ஒருவரிடம், மனச்சாட்சியின்படி குழந்தைகளை வாங்கி விற்பனை செய்கிறேன். பெண் குழந்தையாக இருந்தால் ரூ.2.70 லட்சம், ஆண் குழந்தையாக இருந்தால் ரு.4.15 லட்சம் வரை ஆகும். அழகாக வேண்டுமானால், அதற்கு ஒரு விலை,  ஆரோக்கியமாக வேண்டுமெனில், அதற்கு ஒரு விலை எனப் பேசுகிறார். மேலும், இரு தரப்புக்கும் பிரச்னையில்லாதவாறு ஆவணங்கள் அடிப்படையில் குழந்தையை வழங்குவோம்.  குழந்தை வேண்டுமெனில், முன்னதாகவே தெரிவிக்க வேண்டும்.  தனக்கு கிடைக்கும் கமிஷன் தொகையை கோயிலுக்கும்,  ஆதரவற்றோர் இல்லங்களுக்குமே அளிப்பதாகவும்,  இத் தொழிலில் 30 ஆண்டுகளாக ஈடுபட்டிருப்பதாகவும்,  10 ஆண்டுகள் பணி இருக்கும் நிலையில்,  விருப்ப ஓய்வு பெற்று இந்தத் தொழிலைச் செய்து வருவதாகவும் அவர் பேசுவது பதிவாகியுள்ளது.

ஒரு குழந்தை கைமாற்றப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்களுக்கு பிறந்ததுபோல்,  ராசிபுரம் நகராட்சி அலுவலகம் மூலமாக பிறப்புச் சான்றிதழ் பதிவு செய்து தரப்படும்.  அதற்கு சில மாதங்களாகும்.  தனிப்பட்ட முறையில் ரூ.70 ஆயிரம் வழங்க வேண்டும்.  இதுதொடர்பான தகவல்களை யாரிடமும் பகிர்ந்துக் கொள்ளக் கூடாது என அவர் அந்த ஒலி நாடாவில் பேசியிருக்கிறார். கட்செவியில் வெளியானதைத் தொடர்ந்து,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு உத்தரவின்பேரில்,  ராசிபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் ராசிபுரத்தைச் சேர்ந்த, அரசு மருத்துவமனையில் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா (50) என்பது தெரியவந்தது. மேலும்,  குழந்தை வாங்கி விற்பனை செய்துள்ளதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு குறியது:

குழந்தைகள் விற்பனை செய்ததை அமுதா ஒப்புக்கொண்டுள்ளார்.  ஆனால், உரிய சட்ட விதிகளின்படிதான் விற்றேன் என்கிறார்.  ஒரு குழந்தை விற்றதற்கான ஆதாரத்தைக் காண்பிக்கிறார்.  இந்த சம்பவத்தில் அவருக்கு எதிராக புகார் அளிப்போர் இல்லை.  அவ்வாறு இருந்தால் விரைவான நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.  அமுதாவிடம் விசாரணை நடத்த, ராசிபுரம் மகளிர் காவல் ஆய்வாளர் இந்திராவும்,  குழந்தைகள் எங்கெங்கு விற்கப்பட்டுள்ளன என்பதை விசாரிக்க ராசிபுரம், வெண்ணந்துர் காவல் ஆய்வாளர் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றார். 

கணவருடன் செவிலியர் கைது: குழந்தைகள் விற்பனை விவகாரம் தொடர்பாக ராசிபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன், காவல் ஆய்வாளர்கள் செல்லமுத்து,   இந்திரா ஆகியோர் நடத்திய விசாரணையில், தற்போது வரை மூன்று குழந்தைகளை விற்பனை செய்துள்ளதாக அமுதா வாக்கு மூலம் அளித்துள்ளார்.  அதில், கொல்லிமலையில் 2 குழந்தைகளும், சேலம் அன்னதானப் பட்டியில்  ஒரு குழந்தையையும் வாங்கி விற்றதாக அவர் தெரிவித்துள்ளார். ஓமலூரில் சட்ட விதிகளுக்குள்பட்டு ஒரு குழந்தையை வழங்கியதாகவும் அவர் கூறினார். இதனையடுத்து, அமுதாவையும், அவரது கணவர் ரவிசந்திரனையும் காவல் துறையினர் கைது செய்தனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com