
இந்திய கடற்படை சார்பில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணம் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி சென்னைத் துறைமுகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
சுனாமி, நிலநடுக்கம், கடுமையான புயல், மழை வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இதற்கு தீர்வு காணும் வகையில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் பேரிடர் மேலாண்மைக் குழுமங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுமங்கள் சார்பில் பேரிடர் மேலாண்மை குறித்து ஒத்திகை நிகழ்ச்சி அவ்வப்போது நடைபெறுவது வழக்கம். இதேபோல் பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் கடற்படை தலைமையில் 'மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம்' (HADR - Humanitarian Assistance And Disaster Relief) என்ற பெயரில் சிறப்பு ஒத்திகை நிகழ்ச்சி நாடு முழுவதும் கடலோர மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. பேரிடர் அவசர காலங்களில் பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள வருவாய்த்துறை, உள்ளாட்சி நிர்வாகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவைகளுடன் கடற்படை, கடலோரக் காவல்படை, ராணுவம் போன்ற பாதுகாப்பு அமைச்சகத் துறைகள் இணைந்து செயல்படுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை நீக்கி மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவதுதான் இதன் நோக்கம் ஆகும்.
சென்னைத் துறைமுகத்தில் நடைபெற்ற ஒத்திகை: இந்நிலையில் இந்திய கடற்படை தலைமையில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண ஒத்திகை சென்னைத் துறைமுகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. முதற்கட்டமாக கடும் புயல் சென்னை மாநகரைத் தாக்கியதில் கடலோரம் மற்றும் நிலப்பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியது.
இதனையடுத்து, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலம் மீட்புப் பணியில் தொடர்புடைய அனைத்து முகமைகளையும் ஒருங்கிணைக்கும் ஒத்திகை தொடங்கியது. இதனையடுத்து கடற்படை சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மீட்பு ஒத்திகை தொடங்கியது. கடற்படை கப்பலான "ஐ.என்.எஸ். சுமித்ரா' தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
கடலில் தத்தளித்த ஒருவரை முப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்டு கப்பலுக்கு கொண்டு வருவது, துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்து கடலில் கொட்டிய எண்ணெயை சிறப்பு கருவி மூலம் அப்புறப்படுத்துவது, வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உணவு, மருந்து பொருள்களை ஹெலிகாப்டர் மூலம் விநியோகிப்பது, காட்டுத் தீ ஏற்படும் சமயங்களில் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரைப் பாய்ச்சி தீயை அணைப்பது எப்படி என்பது உள்ளிட்ட ஒத்திகை நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெற்றன.
பிறகு ஒத்திகையின் திறன் மதிப்பு, ஆய்வு மற்றும் மேம்படுத்த வேண்டிய விஷயங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், வருவாய்த்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, கடற்படை அதிகாரி (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) கே.ஜே.குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கடற்படை, கடலோராக் காவல் படை, விமானப்படை, சென்னை மாநகராட்சி, வருவாய், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 500 }க்கும் மேற்பட்ட அதிகாரிகள், வீரர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.