
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நாட்டுப்பற்றைப் போற்றுவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் சுட்டுரையில் கூறியிருப்பது:
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் கிண்டியில் சிலை வைக்கப்பட்டது. திமுக ஆட்சியில் அவருக்கு நினைவு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது.
அதேபோல் திமுக ஆட்சியிலிருந்த போதுதான், கொங்கு வேளாளர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து, கொங்கு மண்டல இளைஞர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
பிரிட்டிஷ் அரசுக்குச் சிம்மசொப்பனமாக இருந்து அவர்களால் தூக்குக்கயிறை முத்தமிடும் நேரத்திலும் சிங்கமென வாழ்ந்த தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது வீரத்தையும், தீரத்தையும் நாட்டு பற்றையும் பெறுவோம். அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் உண்மையாக இருப்பதே தீரன் சின்னமலைக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாகும் என்று அவர் கூறியுள்ளார்.