ஸ்ரீநகரில் சீத்தாராம் யெச்சூரி, டி. ராஜா கைது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் 

கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சீத்தாராம் யெச்சூரி மற்றும் டி. ராஜா ஆகியோர் ஸ்ரீநகரில்  கைது செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீநகரில் சீத்தாராம் யெச்சூரி, டி. ராஜா கைது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் 

சென்னை: கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சீத்தாராம் யெச்சூரி மற்றும் டி. ராஜா ஆகியோர் ஸ்ரீநகரில்  கைது செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய பாஜக அரசு அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 மற்றும் சட்டப்பிரிவு 35ஏ ஆகியவற்றை அதிரடியாக நாடாளுமன்றத்தில் ரத்து செய்ததை தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் பிரதேசம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டு எதிர்கட்சி தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான முகமது யூசப் தாரிகாமி எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவருடைய உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் உள்ளன.

இந்நிலையில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் டி. ராஜா ஆகியோர் இன்று (09.8.2019) தோழர் முகமது யூசப் தாரிகாமியையும் மற்றும் சிறைபிடிக்கப்பட்டுள்ள தலைவர்களையும், ஜம்மு - காஷ்மீர் மக்களையும் சந்திப்பதற்காக சென்ற போது, ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை மத்திய பாஜக அரசின்  எதேச்சதிகாரப்போக்கையும், ஜனநாயக விரோத செயல்பாட்டையும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. .

மேலும் ஜம்மு - காஷ்மீர் மக்களைச் சந்திப்பதற்கு சென்ற தோழர்கள் சீத்தாராம் யெச்சூரி, டி. ராஜா ஆகியோரையும், பத்திரிகையாளர்களையும் அனுமதிக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மத்திய பாஜக அரசை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com