சுடச்சுட

  

  அமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்ட பேராபத்து: சீமான் 

  By DIN  |   Published on : 25th August 2019 12:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  seeman2508

   

  சென்னை: அமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்ட சூழலியல் பேராபத்து என்று  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஞாயிறன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

  பிரேசில் நாட்டிலுள்ள அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ அணையாது இரு வாரங்களாக கொளுந்துவிட்டு எரிகிற செய்தி உலகம் முழுக்க வாழும் சூழலியல் ஆர்வலர்களிடையே பெருங்கவலையையும், சூழலியல் குறித்த பேரச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒட்டுமொத்தப் பூமிப்பந்திற்கே ஆக்சிசனைத் தரும் அமேசான் காடுகளில் ஏற்பட்டிருக்கிற இக்காட்டுத்தீ கடந்தாண்டு ஏற்பட்டதைவிட 86 மடங்கு அதிகம் என எச்சரிக்கிறார்கள் சூழியல் செயற்பட்டாளர்கள். சூழலியல் குறித்தப் பார்வையோ, அக்கறையோ இல்லாத பிரேசில் அதிபர் போல்சோனரோ அமேசான் காடுகளின் அழிவைத் தடுக்க எவ்வித முன்முயற்சியையும் எடுக்காதிருப்பதும், அமேசான் காடுகளில் இருக்கிற கனிம வளங்களை வேட்டையாடுவதற்குக் கடைவிரிக்கிற வகையில் அந்நாட்டின் சூழலியல் கொள்கையை வகுத்திருப்பதும் வேதனைக்குரிய செய்திகளாகும்.

  காலநிலை மாற்றத்தால் உலகமே விழிபிதுங்கி நிற்கிற தற்காலச் சூழலில் உலகின் அரிய வாழ்விடமாக விளங்கும் அமேசான் காடுகள் அழிவது மிகப்பெரிய சூழலியல் அசமத்துவத்தையும், மோசமான தாக்கத்தையும் உருவாக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. காலநிலை மாற்றத்திற்கு எதிராக உலக நாடுகள் தீவிரமாக இயங்க வேண்டிய நெருக்கடி நிலையில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைத் தணித்து வந்த அமேசான் காடுகள் காட்டுத்தீயால் அழிவுக்குள்ளாகியிருப்பது மிக மோசமான எதிர் விளைவுகளை உருவாக்கும்.

  சூழலைக் காத்து வந்த அமேசான் காடுகள் அழிந்து வருவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் ஒருபுறமிருக்க, மறுபுறம் தீப்பிடித்துள்ளதால் அவை அதிகப்படியானக் கார்பனை வெளியிட்டும் வருவதால் மிகவேகமான காலநிலை மாற்றத்தை உருவாக்கும் அபாயம் இருக்கிறது. ‘தற்போது பூமியில் வெளியாகும் கார்பனை உள்வாங்க போதிய மரங்கள் இல்லை’ என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது பி.பி.சி.

  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai