அண்ணல் அம்பேத்கர் சிலை சிதைப்பு: திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் 

வேதாரணயத்தில் ஞாயிறன்று சமூக விரோதிகளால் அண்ணல் அம்பேத்கர் சிலை சிதைக்கப்பட்டதற்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அண்ணல் அம்பேத்கர் சிலை சிதைப்பு: திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் 

சென்னை: வேதாரணயத்தில் ஞாயிறன்று சமூக விரோதிகளால் அண்ணல் அம்பேத்கர் சிலை சிதைக்கப்பட்டதற்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்த அறிவுலக மேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலையை நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வஞ்சக நெஞ்சம் கொண்ட வன்முறையாளர் சிலர் சிதைத்த செயல் மிகக் கடும் கண்டனத்திற்குரியது.

நாடு முழுவதும் தலைதூக்கிவரும் சாதி - மத வெறித்தனங்கள், அவற்றிற்கு ஊக்கமளித்திடும் சனாதன சக்திகள், தமிழகத்திலும் அண்மைக்காலமாகத் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன என்பதற்கு எடுத்துக்காட்டுதான் வேதாரண்யத்தில் நடந்திருக்கும் வேதனை. ஜனநாயக அரசியல் என்கிற முகமூடி அணிந்துள்ள பாசிச சக்திகள் விதைக்கும் விஷ விதைகள் முளைக்கின்ற காரணத்தால் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் சிலைகளை சிதைப்பதும் தலையைத் துண்டித்து  ஆனந்தப்படுவதுமான ஆபத்து தொடர் நிகழ்வாகி வருகிறது.

சட்டம் - ஒழுங்கிற்கு சவால் விடும் இத்தகைய போக்குகளை அரசும் காவல்துறையும் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காமல் உடனடியாக அடக்கி ஒடுக்கி அப்புறப்படுத்த வேண்டும்.

வேதாரண்யத்தில் சிதைக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் சிலை, சீரமைக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அங்கு மெல்ல மெல்ல அமைதி திரும்புகிற நல்ல அறிகுறியின் வாயிலாக மதவெறி - சாதிவெறி சக்திகளுக்கு எதிராகவே தமிழக மக்கள் இருக்கிறார்கள் என்பது சற்று ஆறுதல் தருகிறது.

சுமூகமான நல்லிணக்க வாழ்வை மேற்கொண்டு வரும் தமிழக மக்களை,  வகுப்புவாத - சாதியவாத வெறியர்களுக்கு இரையாகிவிடாமல் எச்சரிக்கையுடன் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மதச்சார்பற்ற - சமூகநீதி ஆர்வலர்கள் அனைவருக்கும் இருக்கிறது.

இரா.முத்தரசன் மாநிலச் செயலாளர்- இ.கம்யூ:

இத்தகைய செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநில செயற்குழு மிக வன்மையாக கண்டிப்பதுடன், இச்செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட உரிய நடவடிக்கைகளை அரசும், மாவட்ட நிர்வாகமும் மேற்கொள்ள வேண்டும்.

வன்முறை செயல்கள் ஒடுக்கப்படுவதுடன், அமைதி திரும்பவும், சுமுகமான சூழ்நிலை உருவாகவும் உரிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். சுமுகநிலை உருவாக அனைத்து தரப்பினரும் முன் வரவேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

கே. பாலகிருஷ்ணன் - மாநிலச் செயலாளர்- மா.கம்யூ:

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்தியாவின் முன்னேற்றத்திற்கும், அரசியல் சாசன உருவாக்கத்திற்கும் அரும்பணியாற்றியவர். இந்திய சமூகத்தில் காலங்காலமாக நீடித்து வரும் மநுதர்ம அடிப்படையிலான சாதிய ஏற்றத்தாழ்வுகளையும், சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்ட வாழ்நாள் முழுவதும் போராடிய பெருமைக்குரியவர்.

இத்தகைய தேசிய தலைவரை ஒரு சாதிய அடையாளமாக கருதி அவரது சிலைகளை உடைப்பது, அவமானப்படுத்துவது தேசத்தை அவமானப்படுத்துவதற்கு சமமாகும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தமாக சுட்டிக்காட்ட விரும்புகிறது.

சீமான் - தலைமை ஒருங்கிணைப்பாளர் - நாம் தமிழர் கட்சி:

அண்ணல் அம்பேத்கரின் சிலையைத் தகர்த்து சாதிவெறியாட்டம் போட்ட சமூக விரோதிகளை எவ்விதப் பாரபட்சமுமின்றி உடனடியாகக் கைதுசெய்து, குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வேதாரண்யம் பகுதியில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாவண்ணம் இருக்க தக்கப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com