எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்களின் அறிவிப்புகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை:  மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்களின்போது வெளியிடப்பட்ட ஏராளமான அறிவிப்புகள்,
தாரமங்கலத்தில் நடைபெற்ற கருணாநிதி சிலைத் திறப்பு விழாவில் பேசுகிறார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
தாரமங்கலத்தில் நடைபெற்ற கருணாநிதி சிலைத் திறப்பு விழாவில் பேசுகிறார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.


தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்களின்போது வெளியிடப்பட்ட ஏராளமான அறிவிப்புகள், சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் எவையும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா தாரமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
 நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு கருணாநிதி சிலையைத் திறந்து வைத்துப் பேசியதாவது: 
கருணாநிதியின் வாழ்க்கையில் சேலம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.  சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் கருணாநிதி பணியாற்றும்போது சிறந்த கதாசிரியராக மாறினார்.  
சேலம் கோட்டை பகுதியில் கருணாநிதி குடும்பத்துடன் வசித்து வந்தார். அண்மையில் நீலகிரி மாவட்டத்தில் கடுமையான மழை பெய்து, பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் சென்று பார்வையிட்டதை விளம்பரம் தேடுகிறேன் என்று முதல்வர் குறிப்பிட்டது தவறு.
முதல்வருக்கு சவால்...
முதல்வருக்கு வெளிப்படையாகச் சவால் விடுகிறேன். தமிழகத்தில் எடப்பாடியைத் தவிர, வேறு எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் தனியாக யார் துணையும் இன்றி நான் வருகிறேன்.  அதேபோல,  முதல்வரும் வந்தால் பொதுமக்கள் யாரை அடையாளம் கண்டு கொள்கிறார்கள் என பார்க்கலாம். 
ஏற்கெனவே இரண்டு முறை மேயர், அமைச்சர், துணை முதல்வர் என அரசுப் பதவிகளிலும், கட்சி பொறுப்புகளிலும் இருந்து வரும் எனக்கு இதற்கு மேல் பொதுமக்களிடம் விளம்பரப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.  இதுபோன்று, கொச்சைப்படுத்துவதை முதல்வர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மாவட்டங்களைப் பிரிப்பதில் கவனம்...
தமிழகத்தில் மாவட்டத்தைப் பிரிப்பதைத் தவிர எதையும் செய்யாமல் திமுகவினரை பார்த்து பிரிவினைவாதிகள் என அதிமுக குற்றம் சாட்டுவது தவறு.  மாவட்டங்களைப் பிரிப்பதில்தான்அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. மாவட்டங்களைப் பிரிப்பதற்கு திமுக எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காது. 
 ஆனால், மாவட்டங்களைப் பிரிப்பதற்கு முன்னதாக மக்களின் விருப்பத்தை அறிந்து உரிய ஆய்வுகள் நடத்தி, கட்டமைப்புகளை ஏற்படுத்திய பின்னரே மாவட்டங்களைப் பிரிக்க வேண்டும். வேலூர் தொகுதி வெற்றிக்குப் பின்னர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது குறித்து அதிமுக தொடர்ந்து விமர்சனம் செய்து வருவது சரியல்ல. கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே அதிமுக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.
மேலும், அமைச்சர்கள் உள்ளிட்ட 20 எம்எல்ஏ க்கள் 4 ஆயிரம் வாக்குகளுக்கு குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் அப்போது வெற்றி பெற்றனர்.  வரும் பொதுத் தேர்தலில் அதிமுகவின் நிலை வெட்ட வெளிச்சமாகத் தெரியவரும்.
அதிமுக பலம் குறைந்து விட்டது...
2016-ஆம் ஆண்டு 133 சட்டப் பேரவைத் தொகுதி  உறுப்பினர்களை பெற்றிருந்த அதிமுக தற்போது 123   உறுப்பினர்களாக பலம் குறைந்து விட்டது.   89 எம்எல்ஏக்களை  வைத்திருந்த திமுகவின் பலம் தற்போது 100 எம்எல்ஏக்களாக  அதிகரித்துள்ளது.
முதல்வர் வெளிநாட்டுப் பயணம் செல்ல உள்ள நிலையில்,  அவரது பயணம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.  ஆனால், முதலீடுகளைத் திரட்டி வந்தால் மட்டுமே பாராட்ட முடியும்.
கடந்த எட்டு ஆண்டு கால அதிமுக ஆட்சியில் இரண்டு முறை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்ற போதிலும், அதனால் எவ்வளவு தொழிற்சாலைகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டன,  எவ்வளவு முதலீடுகள் பெறப்பட்டன என வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு தொடர்ந்து திமுக வலியுறுத்தி வருகிறது.  ஆனால், அதிமுக அரசு அதுபற்றி கண்டுகொள்வதில்லை. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்களில் வெளியிடப்பட்ட ஏராளமான அறிவிப்புகள் மற்றும் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
சேலம் உருக்காலை...
சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கக் கூடாது என திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. ஆனால்,  முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கக்கூடாது என இதுவரை ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை.  சட்டப் பேரவையில் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றவில்லை. இதைத் தடுக்க சம்பந்தப்பட்ட துறை அமைச்சரைச் சந்திக்கக் கூட முதல்வர் முயற்சிக்கவில்லை.  இந் நிலையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com