
புதுவை பட்ஜெட்டை சட்டப் பேரவையில் முதல்வர் நாராயணசாமி இன்று தாக்கல் செய்தார். அதில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால், ரூ.5,000 சன்மானம் வழங்கப்படும் என்று முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும் புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று நாராயணசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சிறப்பம்சங்களாவன..
மீன்பிடி தடைக்கால நிவாரணமாக மீனவர்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ.5,500ல் இருந்து ரூ.6,500 ஆக உயர்த்தப்படும்.
விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும்.
விவசாயிகளுக்கான புதிய காப்பீட்டுத் திட்டம் இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
அரசு பள்ளிகளில் நீட் பயிற்சி தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
மதுபான விலையை அறிந்து கொள்ள புதிய செயலி அறிமுகப்படுத்தப்படும்.
சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியாக உயர்த்தப்படும் என்ற அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டார்.
புதுவையில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தலைமையில், கடந்த ஜூலை 13-இல் மாநில திட்டக் குழு கூட்டப்பட்டு, ரூ.8,425 கோடியிலான பட்ஜெட் தொகை உறுதி செய்யப்பட்டது. அந்தக் கோப்பு ஜூலை 19-ஆம் தேதி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு, ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஒப்புதல் கிடைத்தது.
இந்த நிலையில், புதுவை சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் கிரண் பேடி உரையுடன் திங்கள்கிழமை தொடங்கியது. இதையடுத்து, பட்ஜெட் கூட்டத் தொடரை எவ்வளவு நாள்கள் நடத்துவது என்பது குறித்து பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்குழுக் கூட்டத்தில், வருகிற செப்டம்பர் 7-ஆம் தேதி வரை மொத்தம் 11 நாள்கள் சட்டப் பேரவையை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், மாநில நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்வர் வே.நாராயணசாமி, புதுவை பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.