லண்டனில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் கையெழுத்து

புகழ்பெற்ற லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளைகளை தமிழகத்தில் தொடங்குவதற்கான ஒப்பந்தம் உள்பட 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் லண்டனில் வியாழக்கிழமை
லண்டனில் உள்ள புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் தொடங்குவதற்காக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில்  பகிர்ந்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்.
லண்டனில் உள்ள புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் தொடங்குவதற்காக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில்  பகிர்ந்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்.
Updated on
1 min read


புகழ்பெற்ற லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளைகளை தமிழகத்தில் தொடங்குவதற்கான ஒப்பந்தம் உள்பட 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் லண்டனில் வியாழக்கிழமை கையெழுத்தாகின.

லண்டன்வாழ் தமிழர்கள்: 14 நாள்கள் பயணமாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளிநாடு சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட உள்ளன. துபை வழியாக புதன்கிழமை மாலை லண்டன் சென்ற அவருக்கு அங்குள்ள தமிழர்கள் அமோக வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை பல்வேறு நிகழ்வுகளில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார்.

அதன்படி, மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணி மேம்பாடுகளைக் கண்டறிந்து அதனை தமிழகத்தில் செயல்படுத்தும் வகையில், தமிழக அரசுக்கும், சர்வதேச திறன்கள் மேம்பாட்டுக் கழக நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆம்புலன்ஸ் சேவை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் 108 அவசர கால ஆம்புலன்ஸ் சேவை, இந்தியாவில் சிறப்பான சேவைகளில் ஒன்றாகும். தமிழகத்தில் இப்போது 942 ஆம்புலன்ஸ் வசதிகள், நாளொன்றுக்கு சராசரியாக 3 ஆயிரத்து 300 அவசர விபத்து சேவைகளைக் கையாளுகின்றன. இந்த 108 அவசர கால ஆம்புலன்ஸ் சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில், லண்டன் ஆம்புலன்ஸ் சேவையின் சிறப்பு அம்சங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படவுள்ளன.

விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பை மேலும் குறைத்திட வசதியாக லண்டன் ஆம்புலன்ஸ் சேவை மையத்துக்கு முதல்வர் பழனிசாமி நேரில் சென்றார். லண்டனில் ஆம்புலன்ஸ் இயக்கம் பற்றியும், விபத்துகள் குறித்த தகவல்களைத் தெரிவிக்க பயன்படுத்தும் உதவி மையத்தின் இயக்கம் ஆகியவற்றையும் முதல்வர் பழனிசாமி நேரில் பார்வையிட்டு விவரங்களைக் கேட்டறிந்தார்.

நோக்க அறிக்கை கையெழுத்து: தொற்று மற்றும் தொற்றாத நோய்களைத் தடுத்தல், கட்டுப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் ஆகியவற்றில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின் மூலம் மாநிலத்தில் ஏற்படும் தொற்று நோய்களின் நிலைமை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தை மேலும் செம்மையாகச் செயல்படுத்த லண்டனின் பழைமை வாய்ந்த ஹைஜீன் மற்றும் டிராபிகல் மெடிசன் நிறுவனத்துடன் தமிழக அரசு  நோக்க அறிக்கையில்  கையெழுத்திட்டது.

டெங்கு, மலேரியா போன்ற நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் அந்த நோய்களைக் கையாளும் வழிமுறைகளை அறிவதற்கு  நோக்க அறிக்கை வகை செய்கிறது. 
கிங்ஸ் கிளை: லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தில் கிங்ஸ் மருத்துவமனை கிளைகளை நிறுவிட தமிழக அரசுக்கும், கிங்ஸ் மருத்துவமனைக்கும் இடையே முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிகழ்வுகளின்போது, சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், துறையின் செயலாளர் பீலா ராஜேஷ். முதல்வரின் செயலாளர்கள் எம். சாய்குமார், எஸ்.விஜயகுமார், பி.செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com