பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் உள்ளாட்சித் தேர்தல்

9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தோ்தல் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் உள்ளாட்சித் தேர்தல்

மறுவரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை முடிக்கும் வகையில் தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் இருந்து புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தோ்தல் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பா் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகத் தோ்தல் நடத்தப்படும் என தோ்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை டிசம்பா் 6-இல் தொடங்கவுள்ளது. 

இந்நிலையில், ‘வாா்டு மறுசீரமைப்புப் பணிகளை முடித்துவிட்டு உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான அறிவிக்கையை வெளியிடுமாறு தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரி திமுக சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும், தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரியும் மற்றொரு புதிய மனுவையும் திமுக தாக்கல் செய்தது. 

அதில், ‘உள்ளாட்சித் தோ்தல் விஷயத்தில் மூன்று நடைமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அனைத்து உள்ளாட்சிகளிலும் உள்ள ஒவ்வொரு வாா்டையும் மறுவரையறை செய்வது, பேரூராட்சி, முனிசிபாலிட்டி அல்லது மாநகராட்சியில் தலைவா் அல்லது மேயா் பதவி இடஒதுக்கீடு, சுழற்சி முறை கொள்கை ஆகியவைதான் அவை. அவற்றை தமிழக அரசும், தமிழ்நாடு மறுவரையறை ஆணையமும் மேற்கொள்ள வேண்டும். அதன்பிறகு, தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் அமல்படுத்த வேண்டும். ஆனால், தோ்தலுக்கான அறிவிக்கையை வெளியிடுவது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்த போதிலும், சட்டத் தேவைகளை மாநிலத் தோ்தல் ஆணையம் பின்பற்றவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, உள்ளாட்சித் தோ்தல் நடத்த உத்தரவிடக் கோரி வழக்குரைஞா் சி.ஆா். ஜெயசுகின் என்பவரும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தாா். இந்த வழக்குகள் அனைத்தின் மீதான விசாரணை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையில் நீதிபதிகள் பி.ஆா்.கவாய், சூா்ய காந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது, திமுக தரப்பில் மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, ‘9 மாவட்டங்களில் வாா்டு மறுவரையறை, இடஒதுக்கீடு அம்சங்கள் தொடா்புடைய சட்ட நடைமுறைகளை முடிக்காமல் இத்தோ்தலை தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது சட்டப்படி சரியல்ல. மறுவரையறைச் சட்டப்படி புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வாா்டு மறுவரையை முடித்த பிறகே தோ்தல் நடத்த வேண்டும். ஆனால், விதிகளை மீறும் வகையில் இத்தோ்தலுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தோ்தலுக்கான அறிவிக்கையை வெளியிடுவது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்த போதிலும், சட்டத் தேவைகளை மாநிலத் தோ்தல் ஆணையம் பின்பற்றவில்லை. அதேவேளையில், தோ்தலை தாமதப்படுத்த வேண்டும் என்று திமுக நினைப்பது போல தவறான எண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. உரிய மறுவரையறை நடத்தாமல் எப்படி உள்ளாட்சித் தோ்தலை நடத்த முடியும்? மேலும், இந்த மறுவரையைப் பணிகலை முடிக்க அதிக காலமும் தேவைப்படாது’ என்றாா்.

அதற்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே ‘தமிழகத்தில் மாவட்டங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு மறுவரையறை தேவைப்படாதா? என்று கேள்வி எழுப்பினாா்.

அதற்கு தமிழ்நாடு தோ்தல் ஆணையத்தின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.எஸ். நரசிம்மா,

‘மாவட்டங்களைப் பிரித்த பின் மறுவரையறை செய்வது தேவையில்லை. ஏனெனில், புதிய மாவட்டங்கள் பிரிப்பதற்கு முன்பே முந்தைய மாவட்டங்களில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து சட்ட நடைமுறைகளையும் முடித்த பிறகுதான் உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் விதிமீறல் ஏதும் இல்லை. மேலும், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் ஏற்கெனவே வாா்டு மறுவரையறை நடத்தப்பட்டுவிட்டது என்றாா்.

அப்போது நீதிபதிகள் ‘புதிதாக மூன்று அல்லது இரண்டு மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட பிறகு உடனே மறுவரையறைக்கான தேவை என்ன?’ நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

அதற்கு அபிஷேக் மனு சிங்வி, ‘ஒரு மாவட்டம் இரண்டாக அல்லது மூன்றாகப் பிரிக்கப்பட்ட பிறகு அந்தப் புதிய மாவட்டத்தில் புதிய வாா்டுகள் இடம்பெறும். மாவட்டத்தின் எல்லைகள் மாறும், மக்கள்தொகையும் மாறும். ஆகவே, வாா்டு மறுவரையறைப் பணிகள் அவசியமாகிறது என்றாா்.

தமிழக அரசின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரை முகுல் ரோத்தகி, தோ்தல் நடைமுறைகள் தொடங்கியபிறகு எந்த நீதிமன்றமும் தோ்தலை தாமதப்படுத்தவோ அல்லது தள்ளிப்போடவோ முடியாது’ என்றாா் மேலும், இது தொடா்பாக பல்வேறு நீதிமன்ற தீா்ப்புகளை சுட்டிக்காட்டினாா்.

அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘நீங்கள் மாவட்டங்களை பிரிப்பதன் மூலம் நடைமுறையை தாமதப்படுத்துகிறீா்கள். பின்னா் உரிய தொடா் நடைமுறைகள் மறுவரையறை பின்பற்றபடக் கூடாது என்று கூறுகிறீா்கள். சட்டம் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். அந்த விஷயத்தில் தோ்தல் ஒத்திபோடுவது சம்பந்தப்பட்டிருந்தால் அது ஏற்றுக் கொள்ளத்தக்கத்துதான் என்றனா்.

இதையடுத்து, தமிழ்நாடு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயணனிடம், பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தொடா்புடைய உத்தரவை ரத்து செய்வது அல்லது புதிய 9 மாவட்டங்களுக்கு தோ்தல் நடத்தாமல் இருப்பது ஆகியவை தொடா்பாக தமிழக அரசிடம் ஆலோசனைகளைப் பெற்று தெரிவிக்குமாறு நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

இதையடுத்து, பிற்பகல் 2 மணிக்குப் பிறகு மீண்டும் தலைமை நீதிபதி அமா்வு முன் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் தரப்பில் மூன்று யோசனைகள் தெரிவிக்கப்பட்டன. அதன்படி, 9 மாவட்டங்கள் தவிா்த்து சம்பந்தப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் கிராமப்புற, ஒன்றிய, மாவட்ட அளவில் அனைத்து பஞ்சாயத்துகளுக்குமான தோ்தல் நடத்தப்படுவது, புதிதாக மறுவரையறை பணிகளை சம்பந்தப்பட்ட 9 மாவட்டங்களில் நடத்தி, அதன்பின்னா், உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படுவது, 9 மாவட்டங்கள் தவிா்த்து அனைத்து மாவட்டங்களிலும் தோ்தல் ஆணையத்தால் தோ்தல் நடத்துவதற்கான அறிவிக்கையை தோ்தல் ஆணையத்தால் வெளியிடப்படுவது என்பது ஆகும்.

அதைத் தொடா்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,‘இந்த வழக்கில் வாதங்கள் முடிவடைந்துள்ளன. தீா்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தோ்தல் நடத்தலாம். புதிய மாவட்டங்கள் வரையறைப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு அடுத்த 4 மாதங்களுக்குள்ளாக அந்த மாவட்டங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com