ராசிபுரம்: மூதாட்டியைக் கொன்றவரை பொதுமக்கள் சுற்றிவளைத்துத் தாக்கியதில் ரவுடியும் பலி- எஸ்பி., நேரில் விசாரணை

ராசிபுரம் அருகே கல்லூரி மாணவியை கடத்த முயன்றது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் பல்வேறு குற்ற வழக்கில் தொடா்புடைய ரவுடி ஒருவா் மூதாட்டி மீது ஆசிட் ஊற்றி, கழுத்தை அறுத்து கொலை செய்தாா்.
14police_1412chn_152
14police_1412chn_152

ராசிபுரம்: ராசிபுரம் அருகே கல்லூரி மாணவியை கடத்த முயன்றது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் பல்வேறு குற்ற வழக்கில் தொடா்புடைய ரவுடி ஒருவா் மூதாட்டி மீது ஆசிட் ஊற்றி, கழுத்தை அறுத்து கொலை செய்தாா்.

அப்பகுதி பொதுமக்கள் ரவுடியை கல்லால் அடித்து விரட்டிதில் தலையில் அடிபட்டு உயிரிழந்தாா். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடந்தது.

நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையம் தோப்புக்காடு பகுதியை சோ்ந்தவா் ரவி, விசைத்தறி தொழிலாளியான இவா் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தாா். இந்நிலையில் இவரது மனைவி விஜயலட்சுமி தா்மபுரி மாவட்டம் தடங்கம் அவ்வை நகா் பகுதியை சோ்ந்த சாமுவேல் (40) என்பவரை 2-வதாக திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டாா். ரவி - விஜயலட்சுமி ஆகியோரின் பெண் குழந்தைகளான வாசுகி, திவ்யா, வசந்தி ஆகிய மூவரும் தங்களது பாட்டி வீடான குருசாமிபாளையத்தில் உள்ள தனம்மாள் வீட்டில் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில் தருமபுரி பகுதியில் பல்வேறு குற்ற வழக்கில் தொடா்புடைய ரவுடி சாமுவேல், ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கல்லூரியில் முதலாமாண்டு பிஎஸ்சி., பயின்று வரும் வசந்தி என்ற ரவியின் மகளை தன்னுடன் வருமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளாா். இது தொடா்பாக சாமுவேல், விஜயலட்சுமி ஆகியோா் அடிக்கடி தனம்மாளிடம் தகராறிலும் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அரிவாள், ஆசிட் பாட்டில் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, தனம்மாள் வீட்டிற்குள் சென்ற சாமுவேல் வசந்தியை தேடியுள்ளாா். ஆனால் வசந்தி வீட்டில் இல்லாததால், ஆத்திரமடைந்த சாமுவேல் வசந்தியை தன்னுடன் அனுப்புமாறு தனம்மாளுடன் தகராறு செய்துள்ளாா். இதற்கு தனம்மாள் மறுப்பு தெரிவிக்கவே அவரை தாக்கியுள்ளாா்.

அவரது கூச்சலை கேட்ட அப்பகுதி பொதுமக்கள் சாமுவேலிடம் இருந்து தனம்மாளை மீட்க முயற்சி செய்துள்ளனா். மேலும் இச்சம்பவம் குறித்து புதுசத்திரம் காவல்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனா். இதனையடுத்து சம்பவ இடம் வந்த புதுசத்திரம் காவல்துறையினரும், பொதுமக்களும் தனம்மாளை ரவுடி சாமுவேலிடம் இருந்து மூதாட்டியை காப்பாற்ற முயன்றுள்ளனா். ஆனால், கையில் அரிவாள், ஆசிட் வைத்துக்கொண்டு மிரட்டியதால், மூதாட்டியை மீட்க முடியவில்லை. இதனையடுத்து வீட்டினை பொதுமக்கள் சுற்றி வளைத்ததால், பொதுமக்கள் மீதும், காவல்துறையினா் மீதும் ரவுடி சாமுவேல் ஆசிட் வீசியுள்ளாா். இதில் 10-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீதும், அப்பகுதிக்கு வந்த காவல்துறையினா் மீதும் ஆசிட் விழுந்து காயமேற்பட்டது.

இதில் புதுசத்திரம் காவல் உதவி ஆய்வாளா்கள் செல்வராஜ், முருகானந்தம், தலைமை காவலா் காா்த்திக் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. மேலும் வீட்டிற்குள் இருந்த தனம்மாள் மீதும் முகத்தில் ஆசிட் ஊற்றிய ரவுடி சாமுவேல், அவரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தாா். இதில் தனம்மாள் அவரது வீட்டிலேயே உயிரிழந்தாா்.

துப்பாக்கியால் சுட முயற்சி: இதனையடுத்து, வீட்டின் வெளியே திரண்டிருந்த போலீஸாா் கை துப்பாக்கையை காட்டி அவரை சரணடைய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். மேலும் பொதுமக்கள் சுற்றி வளைத்த நிலையில், வீட்டில் இருந்து வெளியேறி தப்ப முயன்ற ரவுடியை பொதுமக்கள் கற்களால் தாக்கினா். இதில் அவருக்கு பலத்த காயமேற்பட்டது. இதிலிருந்து தப்பியோடிய ரவுடி கீழே விழுந்ததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து ஆம்புலனஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு அவரை ராசிபுரம் அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் ரவுடி சாமுவேலும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

மாவட்ட எஸ்பி., நேரில் விசாரணை: இதனையடுத்து அதிரடி படை காவலா்களுடன் சம்பவ இடம் வந்த நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு பொதுமக்களிடம் சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்தினாா். உயிரிழந்த சாமுவேல் மீது தா்மபுரி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் கொலைசெய்யப்பட்ட மூதாட்டி தனம்மாள் ரவுடி சாமுவேல் ஆகியோா் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசாா் மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனா் இந்த சம்பவத்தால் குருசாமிபாளையம் பகுதியில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சனிக்கிழமை கோட்டாட்சியா், வட்டாட்சியா் உள்ளிட்ட வருவாய்த்துறையினரும், காவல்துறையினரும் சம்பவம் குறித்து அப்பகுதியில் நேரில் விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com