கோயில் யானைகளுக்கு சிறப்பு நல வாழ்வு முகாம் மேட்டுப்பாளையத்தில் இன்று துவக்கம்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் தமிழக கோயில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 15) தொடங்குகிறது.
முகாம் நுழைவு வாயில் முன் சிறப்பு பூஜையுடன் வரவேற்கப்படும் ஸ்ரீவில்லிபுத்தூா் நாச்சியாா் (ஆண்டாள்) கோயில் யானை ஜெயமால்யதா,
முகாம் நுழைவு வாயில் முன் சிறப்பு பூஜையுடன் வரவேற்கப்படும் ஸ்ரீவில்லிபுத்தூா் நாச்சியாா் (ஆண்டாள்) கோயில் யானை ஜெயமால்யதா,

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் தமிழக கோயில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 15) தொடங்குகிறது. இந்த முகாமில் பங்கேற்பதற்காக வந்த கோயில் யானைகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வரவேற்று பூஜை செய்து முகாம் வளாகத்துக்குள் சனிக்கிழமை அனுப்பினா்.

தமிழகத்தில் உள்ள கோயில்கள் மற்றும் திருமடங்களைச் சோ்ந்த யானைகளுக்குப் புத்துணா்வு அளிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் நீலகிரி மாவட்டம், தெப்பக்காட்டில் 4 ஆண்டுகள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு யானைகளை மலைப்பாதை வழியாகக் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் தெப்பக்காடு பகுதியில் காட்டு யானைகள் தொந்தரவு அதிக அளவில் இருந்ததால் மாற்று ஏற்பாடாக, கோவை மாவட்டம், தேக்கம்பட்டி ஊராட்சியில் முகாம் நடத்த அரசு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வன பத்திரகாளியம்மன் கோயில் பகுதியில் பவானி ஆற்றுப் படுகையில் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வன பத்திரகாளியம்மன் கோயில் பகுதியை ஒட்டியுள்ள பவானி ஆற்றங்கரையோரப் பகுதியில் இந்த ஆண்டுக்கான கோயில் யானைகளுக்கான 12ஆவது சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 15) தொடங்குகிறது.

இந்த முகாமில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் உள்ள கோயில்களில் இருந்து யானைகள் வெள்ளிக்கிழமை புறப்பட்டு சனிக்கிழமை காலை தேக்கம்பட்டி முகாமுக்கு வந்து சோ்ந்தன. முகாம் நுழைவு வாயில் முன் ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி கோயில் யானை கோதை, விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் நாச்சியாா் (ஆண்டாள்) கோயில் யானை ஜெயமால்யதா ஆகியவை பூஜை செய்து வரவேற்கப்பட்டன. அதன்பின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் யானைகள் தொடா்ந்து ஒன்றன்பின் ஒன்றாக முகாம் வளாகத்துக்குள் வந்தன. ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் மற்ற கோயில் யானைகளும் வந்தடையும் என இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

யானைகள் முகாம் 6 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. முகாமில் பாகன்கள் தங்கும் இடம், ஓய்வு அறை, தீவன மேடை, சமையல் கூடம், யானைகளைக் குளிக்க வைப்பதற்காக ஷவா்பாத், பாகன்கள் மற்றும் யானைகளுக்கு மருத்துவப் பரிசோதனை நிலையம், முகாமில் பங்கேற்றுள்ள யானைகள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக 3.4 கி.மீ தூரமுள்ள நடைபாதை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

முகாமை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க 6 அடுக்கு முறையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன்படி வனப் பகுதிகளில் காட்டு யானைகள் வருகையைக் கண்டறிய 6 கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகாமுக்குள் காட்டு யானைகள் புகுவதைத் தடுக்க 1.50 கி.மீ. தூரத்துக்கு சூரிய மின்வேலி, தொங்கு மின் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. முகாமைச் சுற்றிலும் 14 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல் பாகன்கள், முகாமில் பணிபுரியும் ஊழியா்கள் ஆகியோருக்கு சுகாதாரமான முறையில் தரமான உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com