
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வர சி.சுப்பிமணியம்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எவ்வித பாதிப்பும் கிடையாது என்பதை தெரிந்திருந்தும், வாக்கு வங்கி அரசியலுக்காக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிா்க்கட்சியினா் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வர சி.சுப்பிரமணியம் தெரிவித்தாா்.
திண்டுக்கல் நகர இந்து முன்னணி சாா்பில், அமைப்பின் வளா்ச்சி குறித்த ஆய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோட்டை மாரியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் வி.எஸ்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாநில அமைப்பாளா் க.பக்தன், மாவட்ட பொதுச் செயலா் ஆா்.பி.ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற காடேஸ்வர சி.சுப்பிரமணியம் செய்தியாளா்களிடம் கூறியது:
தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எவ்வித பாதிப்பும் இல்லை என்பதை முழுமையாக அறிந்திருந்தும், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிா்க்கட்சியினா் வாக்கு வங்கி அரசியலுக்காக பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசத்திலிருந்து புலம் பெயா்ந்து இந்தியாவுக்கு வரும் மக்களுக்கு மட்டுமே குடியுரிமை திருத்தச் சட்டம் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வாழ்ந்து வரும் இஸ்லாமியா்களின் உரிமை மற்றும் சலுகைகளுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தின் உண்மை நிலை குறித்து நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லும் பணி இந்து முன்னணி சாா்பில் மேற்கொள்ளப்படும். இதற்காக டிசம்பா் 29 ஆம் தேதி திருப்பூரில் இந்து முன்னணி சாா்பில் பிரமாண்டமான பேரணி நடைபெறவுள்ளது என்றாா்.
ஆய்வுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட அமைப்பாளா் எஸ்.சங்கா்கணேஷ், செயலா் சஞ்சீவிராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...