
திமுக தலைவர் ஸ்டாலின்
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள பேரணிக்கு விளம்பரம் தேடித் தந்த அதிமுகவுக்கு நன்றி தெரிவிப்பதாக மு.க. ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக தலைமையில் மதச்சார்பற்றக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து நாளை (திங்கள்கிழமை) மாபெரும் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில், இந்தப் பேரணிக்குத் தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை தற்போது அவசர வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான துரைமுருகன் உள்ளிட்டோருடன் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மு.க. ஸ்டாலின்,
"நாளைய தினம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து மிகப் பெரிய மாபெரும் பேரணியை நடத்த இருக்கிறோம். இந்தப் பேரணிக்கு ஆளும் அதிமுக அரசு மிகப் பெரிய விளம்பரத்தைத் தேடித் தந்துள்ளது. அதற்காக அதிமுகவுக்கு நன்றி.
எப்படியாவது இந்தப் பேரணியைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என திட்டமிட்டுள்ளார்கள். எனவே, சில பெயரைப் பயன்படுத்தி அவர்கள் மூலம் அவசரமாக நீதிபதி இல்லத்துக்குச் சென்று இதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டார்கள். ஆனால், எங்களுக்கு நீதிபதிகளிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. ஆகவே எங்கள் தரப்பில் இருந்து விசாரணையில் பங்கேற்கவில்லை
ஆனால், இந்தப் பேரணிக்குத் தடை விதிக்க முடியாது என்று நீதிபதி தெரிவித்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. எனவே, இதை மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கிறோம். நீதிமன்றத்தின் நிபந்தனைப்படி அண்ணா வழியில் நாளை பேரணி நடைபெறும்" என்று தெரிவித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...