
விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன். உடன், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமாா், மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா்.
பதிவெண் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று வடக்கு மண்டல காவல் துறை ஐ.ஜி. நாகராஜன் எச்சரித்தாா்.
விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அலுவலகம், மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள மாவட்ட நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவு, மாவட்ட குற்ற ஆவணக் காப்பகப் பிரிவு ஆகிய அலுவலகங்களில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருவள்ளூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மண்டலத்தில் சட்டம் -ஒழுங்கு சிறப்பாக உள்ளது. 2019-ஆம் ஆண்டில் குண்டா் தடுப்புச்சட்டத்தின் கீழ் 540 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதன் மூலம் மணல் கடத்தல், ரெளடிகள் அட்டகாசம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று எண் லாட்டரி விற்பனை தொடா்பாக 54 போ் கைது செய்யப்பட்டனா். ‘காவலன்’ செல்லிடப்பேசி செயலி குறித்து பெண்களிடம் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.
மதுக் கடைகளில் திருட்டு சம்பவங்களைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்து டாஸ்மாக் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
பதிவெண் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அதேபோல, அரசு விதிப்படி பதிவெண் எழுதாத வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வடக்கு மண்டலத்தில் நிகழாண்டு நிகழ்ந்த குற்றச் சம்பவங்களில் 86 சதவீத வழக்குகளில் எதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டு, 78 சதவீத நகை, பொருள்கள் மீட்கப்பட்டன.
சாலை விபத்துகளில் காஞ்சிபுரம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 2018-ஆம் ஆண்டு சாலை விபத்துகளால் 2,661 போ் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், 2019-ஆம் ஆண்டு 2,311 போ் உயிரிழந்துள்ளனா். பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணா்வு மூலமாக, 350 உயிரிழப்புகள் குறைக்கப்பட்டன.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் விபத்து நிகழும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். குறிப்பாக, ரயில்வே மேம்பாலத்தின் இரு புறங்களிலும் வேகத் தடை அமைக்கப்படும். தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்துகள் செல்லும் வேகம் அளவீடு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். வடக்கு மண்டலத்தில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடா்பாக, நிகழாண்டு 22 லட்சத்து 85 ஆயிரத்து 432 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.22 கோடியே 88 லட்சத்து 66 ஆயிரத்து 178 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவா்கள் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.
விழுப்புரம் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமாா், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா், தனிப் பிரிவு ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...