தமிழகம் 2019

மாநிலத்தில் 33-ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். 
தமிழகம் 2019

ஜனவரி

1: தமிழகம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிக்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது. 2018-ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி அன்று உலக சுற்றுச்சூழல் தினத்தில், ஒருமுறை பயன்படுத்தும் மற்றும் தூக்கி எறியும் நெகிழிக்கு 2019-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் தடை விதிப்பது தொடர்பாக தமிழக அரசு அறிவித்தது.

6: திருவாரூர் சட்டபேரவைக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. கஜா புயலால் திருவாரூர் மாவட்டம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கொடுத்த தகவலின்பேரில், ரத்து செய்யப்பட்டது.

7: தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ண ரெட்டி தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி, மாநில அமைச்சரவையில் இருந்து விலகினார். சட்டவிரோத மதுபானத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, பேருந்து மீது கற்களை ஏறிந்து சேதப்படுத்திய வழக்கில் அவருக்கு தண்டனை விதித்தது சிறப்புநீதிமன்றம்.

7: மாநிலத்தில் 33-ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

20: பாதுகாப்பு உபகரணங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் விதமாக, தமிழக ராணுவ தொழில் வழித்தடத்தை பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம், ரூ.3,123.5 கோடி மதிப்பில் முதலீடு கிடைக்கும்.

27: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதுதவிர, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூரில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகளை காணொலி காட்சி மூலமாக அவர் தொடக்கி வைத்தார்.


பிப்ரவரி

2: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.எஸ்.அழகிரியை அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நியமித்தார்.

10: திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் மற்றும் சென்னை மெட்ரோ ரயிலின் புதிய வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

11: தமிழக அரசின் சிறப்பு நிதி உதவித் திட்டத்தின்கீழ், வறுமைக்கோட்டுக்குகீழ் உள்ள 60 லட்சம் குடும்பத்துக்கு மாதந்தோறும் ரூ. 2,000 உதவித் தொகை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார்.

18: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என்ற தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்குத் தடை விதித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடுமாறு உத்தரவிட்டது.

22: சென்னையை அடுத்த கேளம்பாக்கத் தில் 44.74 ஏக்கரில் ரூ. 394 கோடி மதிப்பில் புறநகர் பேருந்து நிலைய கட்டுமானப் பணிக்காக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

22: வாடகை தொடர்பாக உரிமையாளர்களுக்கும் வாடகைதாரருக்கும் இடையே ஒப்பந்தம் செய்வதை கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

27: பெருநகர சென்னை மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ், மிதிவண்டி பகிர்வுத் திட்டத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்தார்.

மார்ச்

4: கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊட்டச்சத்து திட்டம் மற்றும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இணையதளம் மூலம் இலவசமாகப் பதிவிறக்கம் செய்யும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தொடக்கி வைத்தார்.

6: ஈரோடு மாவட்ட விவசாயிகள், வியாபாரிகளின் கோரிக்கையை அடுத்து ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீட்டை மத்திய அரசு வழங்கியது.

6: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆரின் பெயரைச் சூட்ட மத்திய அரசு அனுமதி அளித்தது. இதுதொடர்பான அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

11: அரசு ஊழியர்கள் ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான பரிசுப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று இருந்ததை ரூ. 25 ஆயிரம் வரை பரிசுப் பொருள்களை அரசு ஊழியர்கள் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு திருத்தம் செய்து உத்தரவிட்டது.

12: பாரம்பரிய கைத்தறி நெசவுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனம் பட்டுப் புடவைக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

15: முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்குத் தடை விதிக்க வேண்டும் என்ற தினகரனின் கோரிக்கைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

30: மக்களவைத் தேர்தலின்போது, வேலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வீட்டில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 10 லட்சம் கைப்பற்றப்பட்டது.


ஏப்ரல்

1: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விவகாரத்தில் புகாரளித்த பெண்ணின் விவரத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய காவல் துறை அதிகாரிகள் பாண்டியராஜன், ஆர்.ஜெயராமன், ஏ.நடேசன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

3: பல்வேறு குற்றங்கள் அதிகரிக்க காரணமாக இருக்கும் டிக்-டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய மத்திய அரசு தடை விதிக்கவேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

5: காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் இரும்புத் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து மூவர் உயிரிழந்தனர்.

16: தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தொகுதியில் அளவுக்கு அதிகமான பணம் புழங்குவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அந்தத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

25: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்டத்துக்கு புறம்பாக குழந்தைகளை வாங்கி விற்பனை செய்ததாக ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவல்லி, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.


மே

7: பலத்த மழையால் ஏற்பட்ட மின்தடை காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கிடைக்காமல் 3 நோயாளிகள் உயிரிழந்தனர்.

11: பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் வருவாய், சொத்து சான்றிதழ் அளிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.

23: மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானது. தமிழகத்தில் திமுக கூட்டணி போட்டியிட்ட 38 தொகுதிகளில் 37- இல் வெற்றி பெற்றது.

28: தமிழகத்துக்கு ஜூன் மாதத்துக்குரிய 9.19 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டது.

28: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பருவத் தேர்வு விடைத்தாள்களில் மதிப்பெண்களை மாற்றி முறைகேடுகளில் ஈடுபட்டதாக 41 தற்காலிகப் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் முறைகேட்டில் சம்பந்தப்பட்ட 137 மாணவர்களின் பட்டமும் ரத்து செய்யப்பட்டது.

28: சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏ.க்கள் தலைமைச் செயலகத்தில் பதவியேற்றுக் கொண்டனர்.

31: தேர்தல் டிஜிபி-யாக இருந்த ஆசுதோஷ் சுக்லா, மண்டபம் அகதிகள் முகாம் டிஜிபி சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தமிழகத்தில், 19 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.


ஜூன்

3: சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல் முறையாக மூன்றாம் பாலினத்தவருக்கான மருத்துவ மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடக்கி வைத்தார்.

7: சேலத்தில் ரூ.441 கோடியில் கட்டப்படும் ஈரடுக்கு மேம்பாலத்தின் முடிக்கப்பட்ட ஒரு பகுதியை போக்குவரத்துக்காக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்து வைத்தார்.

12: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக கோவை உக்கடத்தைச் சேர்ந்த முகமது அசாருதீன் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

28: தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகமும், சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக திரிபாதியும் நியமனம் செய்யப்பட்டனர்.

30: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அனந்தசரஸ் குளத்திலிருந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே எடுக்கப்பட்ட அத்தி வரதர் பொதுமக்களுக்கு காட்சி தந்தார். 30 நாள்களுக்கு சயன கோலத்திலும், 18 நாள்கள் நின்ற கோலத்திலும் இருந்த அத்திவரதரை லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்..


ஜூலை

4: பொதுமக்களின் போக்குவரத்து சேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ரூ.158 கோடி மதிப்பில் 500 புதிய பேருந்துகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்தார்.

4: நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டார்.

5: தேசத் துரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலர் வைகோ குற்றவாளி என சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து வைகோவுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், ஓராண்டு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

29: குட்கா வழக்கு தொடர்பாக மாதவராவ், சீனிவாச ராவ், உமா சங்கர் குப்தா ஆகியோருக்கு சொந்தமான ரூ.246 கோடி சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியது.

31: பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான ஒட்டுமொத்த இடங்களில் 49.74 சதவீத இடங்கள் நிரம்பியதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்தது.

31: கரூர் மாவட்டத்தில் ரூ. 115.71 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரியை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இதன் மூலம் தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்தது.

ஆகஸ்ட்

1: கோவையில் இரண்டு குழந்தைகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி மனோகரனுக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது
உச்சநீதிமன்றம்.

6: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் எனவும், ஆதார் விவரங்களை கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையத்தில் விவரங்களுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.

10: தமிழகத்தில் மது உற்பத்தி செய்யும் இரண்டு ஆலைகளில் வருமான வரித் துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.700 கோடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

13: பழனி பஞ்சாமிர்தத்துக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கப்பட்டதையடுத்து தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருள்களின் எண்ணிக்கை 29-ஆக உயர்ந்தது.

17: நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அத்திவரதர் வைபவம் நிறைவு பெற்றது. சுமார் 1 கோடி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
26: இந்தியாவில் முதன்முறையாக பள்ளி மாணவர்களுக்கென தொடங்கப்பட்ட கல்வித் தொலைக்காட்சியை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தொடக்கி வைத்தார்.

29: திண்டுக்கல் பூட்டு மற்றும் கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீட்டை மத்திய அரசு வழங்கியது.

31: 7 தனியார் நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டது.

செப்டம்பர்

4: அமெரிக்காவின் நியூயார்க்கில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2,780 கோடி முதலீட்டில் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

6: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.என் பாப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய கொலிஜீயம், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த வி.கே.தஹிலராமாணீயை மேகாலயா மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பரிந்துரைத்திருந்தது. தனது மாறுதலை பரிசீலிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால், அவரது கோரிக்கையை கொலிஜீயம் ஏற்க மறுத்துவிட்டது. இதையடுத்து, தனது பதவியை வி.கே. தஹிலராமாணீ ராஜிநாமா செய்தார்.

9: நாட்டில் இரண்டாவது சிறந்த சுகாதாரமான புண்ணிய தலமாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேர்வு செய்யப்பட்டது.

12: 7 ஆண்டுகளுக்கு பிறகு, சென்னை அண்ணா சாலை மீண்டும் இருவழி சாலையாக மாற்றப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

12: சென்னை பள்ளிக்கரணையில் உள்ள சாலையின் நடுவில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர் காரணமாக, இளம் பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மகன் திருமணத்தையொட்டி வைக்கப்பட்டிருந்த பேனர் திடீரென சரிந்து விழுந்ததில் தடுமாறிய சுபஸ்ரீ இருசக்கர வாகனத்துடன் சாலையின் நடுவில் விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த தண்ணீர் லாரி மோதியதில் அவர் அதே இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

13: தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தைப் பின்பற்றி வரும் அனைத்துப் பள்ளிகளிலும் நிகழாண்டு முதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

16: விரிவான மின்சார வாகன கொள்கையை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டார். அதில், ரூ.50,000 கோடி மதிப்பில் முதலீட்டை ஈர்க்கவும், 1.5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இலக்கு வைக்கப்பட்டது.

26: நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து, தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது தொடர்பாக உதித் சூர்யா என்ற மாணவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தந்தையும் கைது செய்யப்பட்டார்.

அக்டோபர்

2: திருச்சியில் உள்ள பிரபல நகைக் கடை ஒன்றில் பின்பக்க சுவற்றை துளையிட்டு மூகமூடி அணிந்த இரு நபர்கள் ரூ.12 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்க, வைர நகைகள் திருடிச் சென்றனர். தமிழகம் முழுவதும் விவாதப் பொருளான இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை அதற்கு அடுத்த சில நாள்களில் போலீஸார் கைது செய்து நகைகள் மீட்கப்பட்டன.

11: சீன அதிபர் ஷீ ஜின் பிங் - பிரதமர் மோடி இடையேயான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. பல்லவர் கால சிற்பக் கலைகளை பறைசாற்றும் வகையில் அங்கு அமைந்துள்ள அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரைக் கோயில் பகுதிகளை இரு தலைவர்களும் கண்டு ரசித்தனர்.

11: அதைத் தொடர்ந்து இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக மோடியும், ஷீ ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிலும், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டு அணிந்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதும், சீன அதிபரை வரவேற்றதும் தேசிய அளவில் பேசுபொருளானது.

11: வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்வின் காரணமாக கடற்கரை நகரமான மகாபலிபுரம், நாட்டைக் கடந்து கவனம் பெற்றது.
20: சென்னை, மதுரவாயலில் உள்ள எம்ஜிஆர் உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அக்கல்வி நிறுவனத்தின் நிறுவனர் ஏ.சி.சண்முகம், முதல்வருக்கு அப்பட்டத்தை வழங்கினார்.

21: தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல் ஆகிய ஆறு இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

24: விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. இதன் மூலம் பேரவையில் அக்கட்சியின் பலம் 125-ஆக அதிகரித்தது. அதேவேளையில் அவ்விரு தொகுதிகளிலும் தோல்வியுற்றதன் காரணமாக திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 100-ஆகவும், காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 ஆகவும் குறைந்தது.

25: திருச்சி அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் பயன்பாடற்று இருந்த ஆழ்துளை கிணற்றில் 2 வயது சிறுவன் சுஜித் தவறி விழுந்த துயரமான நிகழ்வு நடந்தேறியது. நவீன தொழில்நுட்பங்கள் மூலமாகவும், பேரிடர் மீட்புப் படையினரின் துணையோடும் சிறுவனை மீட்க அதீத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகம் மட்டுமன்றி தேசம் முழுக்க சிறுவன் சுஜித்துக்காக சிறப்பு பிரார்த்தனைகளும், வழிபாடுகளும் நடத்தப்பட்டன. ஆனால், அவை பலனிக்காமல் 5 நாள்களுக்குப் பிறகு (அக்.29) சுஜித்தின் சடலத்தையே மீட்க முடிந்தது.

நவம்பர்

7: நாட்டிலேயே காற்று மாசு நிறைந்த பகுதியாக தலைநகர் தில்லி இருந்த நிலையில், அதனை விஞ்சும் வகையில் சென்னை நகரின் மாசு அளவு அதிகரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நவ.5-ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் சென்னையின் காற்று மாசுக் குறியீடு தில்லியைக் காட்டிலும் 13 புள்ளிகள் அதிகரித்து 264-ஆக இருந்தது.

9: சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாணவி பாத்திமா, விடுதி அறைக்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது தற்கொலைக்கு பேராசிரியர்கள் சிலரே காரணம் என அந்த மாணவி எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு நடுவே இந்த விவகாரம் குறித்த விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.

11: சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

18: தமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர். ராஜகோபால் நியமிக்கப்பட்டார். ஆளுநரின் செயலராக இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த அவர், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

26: விழுப்புரத்தில் இருந்து பிரிக்கப்பட்ட புதிய மாவட்டமான கள்ளக்குறிச்சியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்தார்.

28: திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்களாக உதயமாகின. அவ்விரு மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்காக ரூ.184 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் தொடக்கி வைத்தார்.

29: தமிழகத்தின் 37-ஆவது மாவட்டமாக செங்கல்பட்டு உருவெடுத்தது. மூன்று வருவாய் கோட்டங்களும், 8 தாலுகாக்களையும் உள்ளடக்கிய அந்தப் புதிய மாவட்டத்தை முதல்வர் தொடக்கி
வைத்தார்.

டிசம்பர்

2: மேட்டுப்பாளையத்தில் மழை காரணமாக சுற்றுச் சுவர் இடிந்து அருகில் இருந்த வீடுகளின் மீது விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்துக்குக் காரணமாக ஜவுளிக்கடை அதிபர் சிவசுப்ரமணியன் கைது செய்யப்பட்டார்.

2: ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என்றும், நகராட்சி, மாநகராட்சிகளுக்கு தேர்தல் பின்னர் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

2: மருத்துவ தேர்வு வாரியம் சார்பில் திருநங்கையான அன்பு ரூபி என்பவருவருக்கு அரசு செவிலியர் பணி வழங்கப்பட்டது. மாநிலத்திலேயே மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு செவிலியர் பணி வழங்கப்படுவது இதுவே முதன்முறை.

3: நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான்-2 விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருப்பதை தமிழக இளைஞர் சண்முக சுப்ரமணியன் கண்டறிந்தார். அவரது உதவியுடன், அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி அமைப்பும் அத்தகவலை உறுதி செய்தது.

11: தினமணி நாளிதழ் சார்பில் தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் பாரதியாரின் 138-ஆவது பிறந்தநாள் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் உள்ளிட்டோர் அதில் கலந்துகொண்டனர். விழாவில் மூத்த பாரதி ஆய்வாளர் இளசை மணியனுக்கு தினமணி சார்பில் மகாகவி பாரதியார் விருதும், ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

23: திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் திரளாகக் கலந்துகொண்ட பேரணி சென்னையில் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com