பட்ஜெட்டில் வருமானவரிச் சலுகைகள், உழவர்களுக்கான நிதியுதவி வரவேற்கத்தக்கவை: ராமதாஸ்

வருமானவரிச் சலுகைகள், உழவர்களுக்கான நிதியுதவி வரவேற்கத்தக்கவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 
பட்ஜெட்டில் வருமானவரிச் சலுகைகள், உழவர்களுக்கான நிதியுதவி வரவேற்கத்தக்கவை: ராமதாஸ்


வருமானவரிச் சலுகைகள், உழவர்களுக்கான நிதியுதவி வரவேற்கத்தக்கவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"2019-20 ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் இன்று செய்யப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் இன்னும் ஒரு மாதத்தில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், எதிர்பார்க்கப் பட்டவாறே பல சலுகைகள் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. எனினும், வேலைவாய்ப்பையும், வளர்ச்சியையும் ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படாதது பெரும் குறையாகவே உள்ளது.

இந்தியாவில் சபிக்கப்பட்ட சமுதாயமாக உழவர்கள் இருப்பதால், அவர்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வந்தது. பாமக நிழல் நிதிநிலை அறிக்கையிலும் உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 மூலதன மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. அதற்கு மதிப்பளிக்கும் வகையில், 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள உழவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்; கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து முன்தேதியிட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதிநிலையில் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. எனினும் ஏக்கர் கணக்கில் நிதியுதவி வழங்காமல், விவசாயி கணக்கில் நிதியுதவி வழங்குவது எதிர்பார்த்த பலனை வழங்காது. குறைந்தபட்சம் ஹெக்டேருக்கு ஆண்டுக்கு ரூ.10,000 நிதியுதவி வழங்கும் வகையில் இத்திட்டத்தை அரசு மாற்றியமைக்க வேண்டும்.

இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த உழவர்களுக்கு, அவர்கள் வாங்கிய வங்கிக் கடன் மீது 2% வட்டி மானியம் வழங்கப்படும்; கடனை தவணை தவறாமல் செலுத்துவோருக்கு மேலும் 3% வட்டி மானியம் வழங்கப்படும் என்பதும் முழுமையான பலனைத் தராது. இயற்கைச் சீற்றங்களால்  பாதிக்கப்பட்ட உழவர்களின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்வது தான் அவர்களின் துயரைத் துடைக்கும்.

வருமானவரி செலுத்தாமல் இருப்பதற்கான வருவாய் உச்சவரம்பு ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேபோல், நிரந்தரக்கழிவு ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது. இதன்மூலம், நேர்மையாக வரி செலுத்துவோரின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வருமானவரி விதிதங்களில் மாற்றம் செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது. குறைந்தபட்ச வருமான வரி விகிதம் 20% என்பதை ஏற்க முடியாது. ரூ. 5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்திற்கான வரியை இப்போதுள்ள 20 விழுக்காட்டில் இருந்து 10% ஆக  குறைக்க அரசு முன்வர வேண்டும்.  அமைப்புசாரா தொழிலாளர்கள் மாதம் ரூ.100 செலுத்தினால், அவர்களின் 60-ஆவது வயதுக்குப் பிறகு மாதம் ரூ.3000 வழங்கும் புதிய ஓய்வூதியத் திட்டமும் வரவேற்கத்தக்கது. இ.எஸ்.ஐ. சலுகை பெறுவதற்கான வருமான உச்சவரம்பு ரூ. 21 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருப்பது அடித்தட்டு தொழிலாளர்களுக்கு பயனளிக்கும்.

நாடு முழுவதும் 21 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன அல்லது அமைக்கப்பட்டு வருகின்றன; 22-ஆவது எய்ம்ஸ் ஹரியானா மாநிலத்தில் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றான மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க தனியாக நிதி எதுவும் ஒதுக்கப்பட்டதாக தெரியவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உடனடியாக நிதி ஒதுக்கி அடுத்த இரு ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனையை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.60,000 கோடி நிதி ஒதுக்கியும் அது போதவில்லை. இத்தகைய நிலையில் வரும் ஆண்டுக்கும் அதே அளவு நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காது. கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட முக்கியத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளும் போதுமானவையல்ல. முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது அனைத்து துறைகளுக்குமான நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட வேண்டும்.

ரயில்வே துறைக்கு ரூ.64,587 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துறையின் மூலதன செலவுகளுக்கான இலக்கு ரூ. 1,58,658 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மூலதன செலவுகளுக்கான இலக்கு ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கப்பட்டு வரும் போதிலும் தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு போதிய அளவில் நிதி ஒதுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது ஆகும். தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்கள் அனைத்தையும் விரைந்து முடிக்கும் வகையில் தெற்கு ரயில்வே துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யும்படி பாமக சார்பில் வலியுறுத்துகிறேன்.

நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தான் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிகின்றன. இத்தகைய சூழலில் வேலைவாய்ப்புகளைப் பெருக்க போதிய அளவில் திட்டங்கள் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. மொத்தத்தில் தேர்தலை நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்க பல அம்சங்களையும், ஏமாற்றமளிக்கும் சில அம்சங்களையும் கொண்டுள்ளது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com