
கூலி ஆள்கள் கிடைக்காமல் அறுவடை செய்யப்படாத மக்காச்சோளப் பயிர். (உள்படம்) படைப்புழுக்கள் தாக்குதலால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள சோளக் கதிர்கள்.
தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள்கள் வழங்கப்பட்டு வந்த பணி நாள்கள் 150 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பாதிப்புகளுக்கு இடையே விளைவித்த பயிர்களை அறுவடை செய்ய கூலி ஆள்கள் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில், ரெட்டியார்சத்திரம், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 62 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளப் பயிர் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. கடந்த நவம்பர் 16 ஆம் தேதி ஏற்பட்ட கஜா' புயல் மற்றும் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் காரணமாக, சுமார் 37ஆயிரம் ஏக்கர் மக்காச்சோளப் பயிர்களில் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதனிடையே புயல் மற்றும் படைப்புழு தாக்குதலையும் மீறி, விளைச்சல் குறைவாக இருந்தாலும் சோளக் கதிர்களுடன் செடிகள் வயல் வெளியிலேயே சாய்ந்து கிடக்கின்றன.
மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் காரணமாக, கூலி ஆள்கள் கிடைக்காததால் இந்த கதிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். ரெட்டியார்சத்திரம் வட்டாரத்தில் சோளக் கதிர்கள் மட்டுமின்றி, பருத்தி எடுக்கவும் கூலி ஆள்கள் கிடைக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக கே.புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி க.ராஜகோபால் கூறியது: ஒரு ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்வதற்கு சுமார் ரூ.25 ஆயிரம் செலவு செய்ய வேண்டும். விளைச்சல் நன்றாக இருக்கும்பட்சத்தில் ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை செய்ய முடியும். ஆனால் புயல் மற்றும் படைப்புழுத் தாக்குதல் காரணமாக விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இவற்றையும் கடந்து, சில சோளக் கதிர்கள் பாதி விளைச்சல் அடைந்துள்ளன. தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணியாற்ற ஆர்வம் காட்டுவதால்,
கதிர்களை அறுவடை செய்வதற்கு கூலி ஆள்கள் கிடைப்பதில்லை. இதனையும் மீறி வரும் தொழிலாளர்கள் கூடுதல் கூலி கேட்கின்றனர்.
நாள் கூலியாக ரூ.250 வழங்கினால், 1 நாள் செய்ய வேண்டிய பணியை, 3 நாள்களுக்கு செய்கின்றனர். மொத்தமாக பேசி பணிகளை ஒப்படைத்தாலும், 15 பேர் செய்யும் வேலைக்கு 20 பேருக்கான கூலி கேட்கின்றனர். ஒரு மக்காச்சோளக் கதிரில் மட்டும் 500 கிராம் எடை கொண்ட சோளம் கிடைக்கும். ஆனால், இன்றைக்கு ஒரு கதிரில் 100 கிராம் சோளம் கூட பெற முடியாத நிலை உள்ளது. விளைந்த வெள்ளாமையை(விளைச்சலை) காட்டில் விடக் கூடாது என்பதற்காக, வேறு வழியின்றி கூடுதல் கூலி கொடுத்தாலும் அறுவடை செய்ய வேண்டும் என வேலை ஆள்களை தேடி வருகிறோம் என்றார்.
கொடகனாறு குளங்கள், வாய்க்கால் பாதுகாப்பு பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அ.சவேரியார் மற்றும் செயலர் ரா.சுந்தரராஜ் கூறியது: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி நாள்கள் 150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படுவது விவசாயிகள் மட்டுமே.
மகாத்மா காந்தியின் பெயரால் அமல்படுத்தப்பட்டு வரும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், காந்தியின் ஊரக மற்றும் விவசாய வளர்ச்சி கொள்கைகளுக்கு எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் வகையிலேயே செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்த அளவீடுகள், பராமரிக்கப்படுவதில்லை. இதனால், பெயரளவுக்கு 2 மணி நேரம் வேலை செய்துவிட்டு, ரூ.150 முதல் ரூ.200 வரை கூலியாகப் பெற்றுச் செல்லும் பயனாளிகள், விவசாயப் பணிகளை செய்வதற்கு வர மறுக்கின்றனர். விவசாயம் மற்றும் விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டுமெனில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...