
பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகிய 11 மக்களவைத் தொகுதி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்துக்காக கமல்ஹாசன் பொள்ளாச்சிக்குத் திங்கள்கிழமை வந்தார்.
இதில் 5 மக்களவைத் தொகுதி பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி மக்கள் நீதி மய்யம் மேற்கு மண்டல தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்கள் நீதி மய்யத்தைப் பொருத்தவரை மக்கள்தான் தலைவர்கள். நாங்கள் தொண்டர்களாக இருப்போம். முழு நேர அரசியல்வாதி என்று யாருமே கிடையாது. எங்கள் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. ஒருமித்த கருத்துள்ளவர்களுடன் கூட்டணி அமைக்கப்படும். கூட்டணியை முடிவு செய்த பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். கடந்த ஐந்து ஆண்டு கால பாஜக ஆட்சியில் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. பாஜகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைக்கப் போவதில்லை.
விவசாயிகளுக்கான திட்டம் நிறைய உள்ளது. அது தொலைநோக்குத் திட்டமாக இருக்கும். முன்னேறும் தமிழன் என்பதுதான் எங்கள் அகிம்சை போராட்டத்தின் இலக்கு.
சிபிஐ விசாரணை விவகாரத்தில் மம்தா பானர்ஜி நடத்துவது உரிமைப் போராட்டம். மம்தா அரசுடன் தமிழக அரசை ஒப்பிட்டால், அது மம்தா அரசை அவமதிப்பதுபோல் ஆகும் என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...