
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி முருகன், வேலூர் மத்திய சிறையில் கடந்த சனிக்கிழமை முதல் 4 நாள்களாக மீண்டும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆளுநருக்கு மனு அனுப்பிய விவகாரம் தொடர்பாக சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி தொடர்ந்து மனஉளைச்சல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டி இந்த உண்ணாவிரதத்தை அவர் மேற்கொண்டிருப்பதாக முருகனின் வழக்குரைஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, அவரது கணவர் முருகன், பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்வது என்று தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி பரிந்துரை செய்யப்பட்டது. எனினும், இந்த விவகாரத்தில் ஆளுநர் இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. இதற்கு பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதனிடையே, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் கடந்த மாதம் 19, 20ஆம் தேதிகளில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். சிறைக் காவல் கண்காணிப்பாளர் ஆண்டாளின் வேண்டுகோளை ஏற்று அவர் 20ஆம் தேதி மாலை உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
இந்நிலையில், முருகன் வேலூர் மத்திய சிறையில் கடந்த சனிக்கிழமை முதல் தொடர்ந்து 4ஆவது நாளாக மீண்டும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். சிறையில் அவரை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசிய அவரது வழக்குரைஞர் புகழேந்தி இத்தகவலைத் தெரிவித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...