
புதிய உழவன் செயலியை தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் வேளாண்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, தலைமைச்செயலர் கிரிஜா வைத்தியநாதன், வேளாண்மைத்துறை முதன்மைச் செயலர்
வேளாண் பணிகளுக்கான இயந்திரங்களை விவசாயிகள் குறைந்த வாடகையில் பெறுவதற்கு வழி செய்யும் புதிய அம்சத்தின் செயல்பாட்டை (உழவன் செயலி) முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி துவக்கி வைத்தார்.
இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. வேளாண்மைத் துறை திட்டங்களின் மானிய விவரங்கள், பயிர் காப்பீடு செய்த விவரங்கள் உள்ளிட்ட 12 முக்கிய சேவைகளை உள்ளடக்கிய உழவன் கைபேசி செயலியை முதல்வர் பழனிசாமி கடந்த ஆண்டு துவக்கி வைத்தார். இதுவரை 3.8 லட்சம் பயனாளிகள் இந்த செயலியை முழுமையாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், 72 ஆயிரத்து 548 விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உயர் மதிப்புள்ள இடுபொருள்களை மானியத்தில் முன்னுரிமை அடிப்படையில் பெறும் வகையில் இந்த செயலியின் மூலம் முன்பதிவு செய்துள்ளனர்.
இதன் அடுத்தகட்டமாக, டிராக்டர் மற்றும் பண்ணை இயந்திரங்களை வைத்திருக்கும் விவசாயிகள் வாடகைக்கு அவற்றை அளிக்கவும், தேவையான விவசாயிகள் அதனை வாடகைக்குப் பெறவும் பதிவு செய்வதற்கான புதிய வசதியை முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். இந்தச் சேவையின் மூலமாக, விவசாய இயந்திரங்களை வாடகைக்கு எடுக்க விரும்புவோர் தங்களுக்குத் தேவையான பண்ணை இயந்திரம் யாரிடம் உள்ளது, எந்தத் தேதியில் கிடைக்கும், அதற்கான வாடகை என்ன போன்ற விவரங்களை அறிய முடியும். அதேபோன்று, விவசாய இயந்திரங்களை வாடகைக்கு அளிக்க விரும்புவோர் இயந்திரங்கள் யாருக்குத் தேவை, எந்தத் தேதியில் தேவை போன்ற விவரங்களையும் அறியலாம்.
இந்த செல்லிடப்பேசி செயலியை பயன்படுத்த முடியாதவர்கள் சேவை மையத்தின் மூலமாக கட்டணமில்லாத தொலைபேசி எண்ணை (1800 420 0100) தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...