தமிழகத்தின் வருவாய்க்காக டாஸ்மாக்கையே நம்பிக் கொண்டிருக்காதீர்கள்: யாருக்கு யார் சொன்னது என்றால்..

தமிழக அரசின் வருவாய்க்காக டாஸ்மாக் மதுபானக் கடைகளையே நம்பிக் கொண்டிருக்காமல், மாற்று ஏற்பாடுகளில் கவனம் செலுத்துங்கள் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் வருவாய்க்காக டாஸ்மாக்கையே நம்பிக் கொண்டிருக்காதீர்கள்: யாருக்கு யார் சொன்னது என்றால்..
Updated on
2 min read

சென்னை: தமிழக அரசின் வருவாய்க்காக டாஸ்மாக் மதுபானக் கடைகளையே நம்பிக் கொண்டிருக்காமல், மாற்று ஏற்பாடுகளில் கவனம் செலுத்துங்கள் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றியமைக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் செவ்வாய்க்கிழமை மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, மதுவால் தமிழகத்தில் ஒருதலைமுறையே சீரழிந்து விட்டது. இனியாவது  தமிழக அரசு இந்த நிலையை  மாற்ற வேண்டும். தமிழக அரசு வருவாய்க்காக டாஸ்மாக் மதுக்கடைகளையே நம்பிக் கொண்டிருக்காமல், மாற்று ஏற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் உள்ளனவா என்ற கேள்விக்கு, இல்லை என்று பதில் அளிக்கப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் பல குற்றங்கள் டாஸ்மாக் கடைகளால்தான் நிகழ்கின்றன. எனவே, டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதால் பல சிக்கல்களை தவிர்க்கலாம் என்றும் அனைத்து ஊர்களிலும் கிராம சபைக் கூட்டங்களை நடத்தி கிராமங்களில டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றலாமே என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கில் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், அன்றைய தினத்துக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

வழக்கின் பின்னணி: திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் கடந்த ஆண்டில் ரூ. 31,244 கோடிக்கு மதுபானம் விற்கப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனையில் அரசு ஈடுபட்டு வருகிறது. 

இந்தியாவில் மது அருந்தும் பழக்கம் 36 சதவீதமாகவும், தமிழகத்தில் மது அருந்தும் பழக்கம் 46.7 சதவீதமாகவும் உள்ளது. மது அருந்தும் பழக்கத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 

மது பழக்கத்தால் மனமுறிவு, நிம்மதியின்மை, உடல் நலக்குறைவு உள்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

தமிழகத்தில் மதுபானக் கடைகள் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணிவரை செயல்படுகின்றன. இரவில் போதையில் வாகனத்தில் செல்வோரால் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

மது விற்பனைக்கு எதிராகவும், மதுக்கடைகளை மூடவும் வலியுறுத்தி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இருப்பினும் மது விற்பனை அதிகரித்து வருகிறது.

எனவே தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்க தடை விதித்தும், மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்த அறிவிப்புகளை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் வைக்கவும், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலைப்பட்டியல் வைக்கவும், மது விற்பனைக்கு ரசீது வழங்கவும், கூடுதல் விற்பனைக்கு மது விற்றால் புகார் அளிக்க உயர் அதிகாரிகளின் தொடர்பு எண் மற்றும் விவரங்களை டாஸ்மாக் கடைகளில் எழுதி வைக்கவும், மதுபான பாட்டில்களில் அதில் கலந்துள்ள பொருள்கள் மற்றும் தயாரிப்பாளர் விவரங்களை தமிழில் குறிப்பிடவும், 

டாஸ்மாக் விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றியமைக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com