
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை நடவடிக்கைகளுக்கு முழுமையாகத் தடைவிதிக்குமாறு தாங்கள் கோரவில்லை என்று, அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.
இந்த ஆணையத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவர்கள் என 130-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் விசாரணை தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதற்கிடையில், அப்பல்லோ மருத்துவர்களை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஆணையம் வலியுறுத்துவதற்கும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று அந்த மருத்துவமனை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கும், விசாரணை ஆணையத்துக்கும் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை நடவடிக்கைகளை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவில்லை.
மாறாக, அப்பல்லோ மருத்துவர்களை நேரில் ஆஜராக வலியுறுத்தக் கூடாது என்றே கோரிக்கை விடுத்தோம்.
வரும் 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் அப்பல்லோ மருத்துவர்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்த நிலையில், அதில் இருந்து விலக்கு அளிக்குமாறு ஆணையத்திடம் வலியுறுத்தத் திட்டமிட்டிருந்தோம்.
ஆனால், அதற்கு முன்னதாக, ஆணையமே அவர்களிடம் விசாரணை நடத்துவதை தற்காலிகமாக ஒத்திவைப்பதாகத் தெரிவித்துள்ளது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.