
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி குறித்து அதிமுக உறுப்பினர் இன்பதுரை பேசியதற்கு, திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் இன்பதுரை பேசியது:
தூத்துக்குடியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி பேசினார். எங்கள் தாத்தா (கருணாநிதி) எல்லோருக்கும் தொலைக்காட்சி இலவசமாகக் கொடுத்தார். எங்கள் அப்பா (மு.க.ஸ்டாலின்) ஆட்சிக்கு வந்து எல்லோருக்கும் செட்டாப் பாக்ஸ் இலவசமாக தருவார் என்றார். டிவி கொடுத்தால் மட்டும் போதுமா? அது ஓடுவதற்கு மின்சாரம் வேண்டாமா? திமுக ஆட்சியில் அது இல்லை. அதிமுக ஆட்சியில்தான் தடையில்லாமல் மின்சாரம் கொடுத்தோம் என்றார்.
இதற்கு திமுக உறுப்பினர் அனைவரும் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது பேரவைத் தலைவர் தனபால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகனைப் பேசுவதற்கு அனுமதித்தார்.
துரைமுருகன்: மக்களுக்கு இலவசமாக தொலைக்காட்சி கொடுத்தோம். அது இப்போதும் எல்லோரும் வீடுகளிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. செட்டாப் பாக்ஸும் ஸ்டாலின் கொடுக்கலாம். தவறு இல்லை. நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். ஆனால், அதிமுக ஆட்சியில் ஏழைகளுக்கு ஈமச் சடங்குக்கு அளிக்கப்பட்டு வந்த நிதிகூட கொடுக்கப்படவில்லை. முதியோர் உதவி தொகைக்கூட கொடுக்கவில்லை என்றார்.