
மக்களவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணியை விரைவில் அறிவிப்போம் என்று, அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மு.க.ஸ்டாலின் பேசியது:
திமுகவைப் பொருத்தவரை ஏற்கெனவே ஒருசில கட்சிகளோடு தோழமை அமைத்துள்ளோம். எனினும், அது முறையோடு அங்கீகாரத்தோடு விரைவில் அறிவிக்க உள்ளோம்.
ஆனால், அதே நேரத்தில் இன்னொரு கூட்டணி அமையும் நிலையையும் நாட்டில் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவைப் பொருத்தவரைக்கும், யாரோடு கூட்டணி அமைக்கப் போகிறார்கள் என்ற செய்தி தொடர்ந்து வருகிறது.
21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை மக்களவைத் தேர்தலோடு சேர்த்து வைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
6 மாதத்துக்கு மேல் எந்தத் தொகுதியிலும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இல்லாமல் இருக்கக்கூடாது என்பது சட்ட விதிமுறை.
ஆனால், அதையெல்லாம் காலில் போட்டு மிதித்துவிட்டு மக்களவைத் தேர்தலோடு நடைபெற இருக்கும் இந்தத் தேர்தலை தடுத்து நிறுத்துவதற்கான சூழ்ச்சிகளை மோடி தலைமையில் இருக்கக்கூடிய மத்திய அரசு செய்து கொண்டிருக்கின்றது. இது, உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
பிரதமர் மோடி திருப்பூருக்கு வந்து தேர்தல் பிரசாரத்திலும், அரசு நிகழ்ச்சியிலும் பங்கேற்று சென்றுள்ளார். அரசு நிகழ்ச்சி என்று சொன்னால், தமிழ்த்தாய் வாழ்த்து துவங்கி, அந்த நிகழ்ச்சி முடிந்ததற்குப் பிறகு தேசிய கீதம் பாடும் முறை தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால், மோடியின் நிகழ்ச்சியில் அது கடைப்பிடிக்கவில்லை. ஏற்கெனவே, மதுரைக்கு வந்தபோதும் அந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்று.
அதேநேரத்தில் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்று பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, மோடி தமிழில் பேசுகிறார். மக்களை ஏமாற்றும் நிலையில் இன்றைக்கு மோடி அரசு இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சாட்சிகள் தேவையில்லை என்றார்.