தமிழகத்தை வஞ்சித்தது பாஜகவா, காங்கிரஸா என்று பேரவையில் அதிமுக - காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இடையே விவாதம் நடைபெற்றது.
பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி பேசும்போது, மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய நிதி வரவில்லை என்று பக்கத்துக்குப் பக்கம் கூறியுள்ளீர்கள். இதன் மூலம் உண்மையான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளீர்கள். தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி ஒவ்வோர் ஆண்டும் குறைந்துகொண்டே வந்துள்ளது என்றார்.
அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு கூறியது: இதை வஞ்சப் புகழ்ச்சியாகக் கூறுகிறீர்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கேற்பதான் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி நிலையும் இருக்கும். 9-ஆம் நிதிக்குழு பரிந்துரையில் இருந்து தமிழகத்துக்கான நிதி படிப்படியாக குறைக்கப்பட்டே வந்துள்ளது. வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் என்று கூறி தமிழகத்துக்கான நிதியைக் குறைத்து வருகின்றனர். தமிழகத்துக்கு வர வேண்டிய மானியங்களும் குறைக்கப்பட்டுள்ளன. அதைப்போல, மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்களுக்கு முதலில் ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் நிதியை அளித்துவிட்டு, பிறகு தமிழக அரசையே அந்தத் திட்டங்களைச் செயல்படுத்த சொல்கிறது. இதையெல்லாம் கடந்துதான் நிலையான பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளோம்.
விஜயதரணி: வேலைவாய்ப்பு உருவாக்காத நிலை ஒருபுறம் இருப்பதுடன், வேலை இழப்பு நிலை நாட்டில் அதிகரித்துள்ளது என்று கூறி, மத்திய அரசுக்கு எதிராக சில கருத்துகளை விஜயதரணி கூறினார். அதைப் பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார். இதற்கு காங்கிரஸார் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமியை பேரவைத் துணைத் தலைவர் பேசுவதற்கு அனுமதித்தார்.
கே.ஆர்.ராமசாமி: மத்திய பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று கூறுவதில் என்ன தவறு இருக்கிறது?
ஓ.பன்னீர்செல்வம்: 9-ஆவது நிதிக்குழு பரிந்துரையில் இருந்து மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்துக்கான நிதியைக் குறைத்தே அளித்து வருகிறது. இடையில் ஒரே ஒரு முறைதான் காங்கிரஸ் ஆட்சியில் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதுவும் காங்கிரஸுடன் திமுக கூட்டணியில் இருந்த காலத்தில்தான். மற்றபடி, தொடர்ந்து நிதி குறைக்கப்பட்டுதான் வருகிறது.
அமைச்சர் டி.ஜெயக்குமார்:
தமிழகத்தை வஞ்சித்ததைப் பற்றி விஜயதரணி கூறுகிறார். காங்கிரஸ் ஆட்சியில்தான் முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிதான் காரணம். மத்திய அரசின் உதவி இல்லாமல் ஈழத் தமிழர்களைக் கொல்ல முடியுமா என்றார்.