
புதிய ரயில் பாலம் அமைப்பது தொடர்பாக திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட இந்திய ரயில்வே கட்டுமானத் தலைமை மேலாளர் பி.கே.ரெட்டி உள்ளிட்டோர்.
பாம்பனில் ரூ. 200 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் அமைக்கப்படும் என இந்திய ரயில்வே கட்டுமான தலைமை மேலாளர் பி.கே.ரெட்டி கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் - ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் 2.2 கிலோ மீட்டர் தொலைவில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் ரயில் தூக்குப் பாலம் கடந்த 1914 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
இந்த ரயில் பாலம் 100 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி வரை பயன்பாட்டில் இருந்த வந்த இந்த பாலம் அதன் பின்னர் கப்பல்கள் சென்று வரும் போது தூக்கும் பாலப் பகுதியில் சேதமடைந்தது. இதனைத்தொடர்ந்து பாலத்தில் ரயில்கள் இயக்கப்படவில்லை.
பின்னர் ரூ. 23 கோடி மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து தற்போது பயணிகள் இல்லாத ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. 2 மாதங்களுக்கு மேலாக பயணிகள் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் தொடர்ந்து பல்வேறு ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்திய ரயில்வே கட்டுமானத் தலைமை மேலாளர் பி.கே.ரெட்டி திங்கள்கிழமை ராமேசுவரம் வந்தார். பின்னர் பாம்பனில் இருந்து நாட்டுப்படகில் சென்று பாம்பன் தூக்கு பாலத்தை ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
பாம்பன் ரயில் தூக்குப் பாலம் 30 மீட்டர் தொலைவில் மூன்று மீட்டர் உயரத்தில் ரூ. 200 கோடி மதிப்பீட்டில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்படும். இந்தப் பணிக்கான ஒப்பந்தம் மார்ச் மாதம் விடப்பட்டு 2 ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்படும். அதன் பின்னர் பழைய பாலம் அகற்றப்படும். மேலும் பாலப் பணிக்கான திட்ட மதிப்பீடு கூடுதலாக தேவைப்பட்டாலும் அதற்கு ஏற்றவாறு அதிகரிக்கப்படும் என்றார்.
ஆனால் தற்போதைய பாலத்தில் ரயில் எப்போது இயக்கப்படும் என்ற கேள்விக்கு பதில் கூற மறுத்துவிட்டார்.