
தூத்துக்குடி மாணவி சோபியா உடனான மோதல் விவகாரம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி கந்தன் காலனியைச் சேர்ந்த லூயிஸ் ஷோபியா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
நான் கனடாவில் கல்வி பயின்று வருகிறேன். கடந்த ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றபோது, என்னுடன் அதே விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் பயணித்தார்.
அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பலர் இறந்தது எனக்கு மன வருத்தமாக இருந்தது. இதனால், விமானத்தில் இருந்து இறங்கும்போது, மத்திய அரசை விமர்சித்து கருத்து தெரிவித்தேன். இதனால், ஆத்திரமடைந்த தமிழிசை சௌந்தரராஜன், விமான நிலையத்தில் என்னை மிரட்டும் நோக்கில் தகாத வார்த்தைகளால் திட்டினார். அவரது ஆதரவாளர்களும் கடுமையாக நடந்து கொண்டனர்.
இதுதொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன் அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி புதுக்கோட்டை போலீஸார் என் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நான் எந்த தவறும் செய்யவில்லை. எனவே, என் மீதான வழக்கில் போலீஸார் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும்.
மேலும், தூத்துக்குடி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கையும், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கையும் ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி சேஷாயி முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி சோபியா மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை மீதான விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இதுகுறித்து புகார்தாரரான தமிழிசை சௌந்தரராஜனுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.