
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திங்கள்கிழமை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார். செய்தியாளர்களிடம் வைகோ கூறியது:
மதிமுகவின் சட்டத்துறை செயலாளர் வீரபாண்டியன் எழுதிய தமிழரின் தொன்மையும் சீர்மையும் கலைஞர் உரை என்ற நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற உள்ளது. மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட உள்ளார். இதற்கான அழைப்பிதழை அளித்தேன் என்றார். கூட்டணியில் எந்தெந்தக் கட்சிகள் இருக்கும் என்பது குறித்து இப்போது சொல்ல முடியாது என துரைமுருகன் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு வைகோ பதில் அளிக்காமல் சென்றார்.
காதர் மொகிதீன் சந்திப்பு: அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் திங்கள்கிழமை சந்தித்தார். மதுரையில் நடைபெற உள்ள முஸ்லிம் லீக் மாநாட்டுக்கான அழைப்பிதழை ஸ்டாலினிடம் காதர் மொகிதீன் வழங்கினார்.