
விவசாயிகள் பக்கம்தான் எப்போதும் அதிமுக அரசு இருக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் செங்குட்டுவன் பேசும்போது, மேட்டூர் பகுதி செழிப்பானது. ஆனால், கிருஷ்ணகிரி வறட்சியான பகுதி. பெண்ணையாற்றின் கூடுதல் நீரை கிருஷ்ணகிரி பகுதிக்குக் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். ஆனால், சில முக்கிய பகுதிகள் விடுபட்டுள்ளன என்றார்.
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டுப் பேசியது:
பெண்ணையாற்றில் வரும் கூடுதல் வெள்ளநீரை, எண்ணெய்கோல் புதூர் அணைக்கட்டின் இடதுபுறம் மற்றும் வலதுபுறத்தில் புதிய வாய்க்கால்கள் அமைத்து, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்துக்கு விவசாயத்துக்குத் தண்ணீர் கொண்டு செல்ல ரூ.72 கோடி செலவில் நிலம் கையகப்படுத்த 2018 பிப்ரவரி 1-இல் அரசாணை போடப்பட்டது.
திமுக உறுப்பினர் சில பகுதிகள் விடுபட்டதாக கூறினார். அந்தப் பகுதியும் ஆய்வு செய்யப்படும். பெண்ணையாற்றின் குறுக்கே போச்சம்பள்ளி தாலுகா, அரசம்பட்டி கிராமத்தில் ரூ. 8.5 கோடி செலவில் தடுப்பணை கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து இருக்கிறது.
அதேபோல, பெண்ணையாற்றின் குறுக்கே பெண்டரஹள்ளி கிராமத்தில் ரூ.8.5 கோடி செலவில் தடுப்பணை கட்டுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு இருக்கிறது.
எனவே, எப்பொழுதும் அதிமுக அரசு விவசாயிகள் பக்கம்தான் இருக்கும் என்றார்.