குட்கா ஊழல்: காவல் துறை உயரதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை

குட்கா ஊழல் வழக்குத் தொடர்பாக, தமிழக காவல் துறையைச் சேர்ந்த டிஜிபி அந்தஸ்தில் உள்ள இரு அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை நடத்தினர்.
Updated on
1 min read


குட்கா ஊழல் வழக்குத் தொடர்பாக, தமிழக காவல் துறையைச் சேர்ந்த டிஜிபி அந்தஸ்தில் உள்ள இரு அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை நடத்தினர்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, போதைப் பாக்குகள் விற்பனையை லஞ்சம் பெற்றுக் கொண்டு சில உயர் அதிகாரிகள் அனுமதித்ததாகப் புகார்கள் எழுந்தன. கடந்த 2016-இல் வருமானவரித்துறையினர் சென்னை அருகே செங்குன்றத்தில் உள்ள  குட்கா கிடங்கில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கிடைத்த ரகசிய டைரியில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்,  சென்னை காவல்துறை ஆணையராக அப்போது இருந்த இப்போதைய டிஜிபி தே.க.ராஜேந்திரன், சென்னை பெருநகரக் காவல்துறை முன்னாள் ஆணையரும், ஓய்வு பெற்ற டிஜிபியுமான எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட பல காவல்துறை உயர் அதிகாரிகள், கலால் துறை அதிகாரிகள்,  உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆகியோர் பெயர்கள் லஞ்சம் வாங்குவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கர்,  டிஜிபி தே.க.ராஜேந்திரன்,  ஓய்வு பெற்ற டிஜிபி ஜார்ஜ் ஆகியோர் வீடு உள்பட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி சோதனை செய்து, முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்குத் தொடர்பாக சம்பந்தப்பட்ட கிடங்கு உரிமையாளர்கள் மாதவ ராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா, மத்திய கலால்துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் அடுத்தடுத்து கைது செய்தனர். கடந்த டிசம்பர் மாதம் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது உதவியாளர் சரவணன், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்தனர்.  இந்த வழக்கின் அடுத்தகட்டமாக ஊழல் நடைபெற்ற காலகட்டத்தில் சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றிய மூன்று அதிகாரிகளிடம் கடந்த வாரம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது. 
டிஜிபி அந்தஸ்தில் உள்ள...: இந்த நிலையில் சென்னை திருமங்கலத்தில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள காவல் துறையைச் சேர்ந்த இரு அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை குட்கா ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தினர்.  அதில் ஒருவர் ஓய்வு பெற்ற டிஜிபி ஆவார்.   இதையடுத்து அவர்கள் அளித்த பதில்கள் வாக்குமூலமாகப் பதிவு செய்யப்பட்டது.  இந்த விசாரணை குறித்த தகவல்கள் வெளியே கசிந்து விடாமல் ரகசியம் காக்கப்பட்டது.  இருப்பினும் டிஜிபி அந்தஸ்தில் உள்ள உயரதிகாரிகளிடம் சிபிஐ விசாரித்ததை காவல் துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.  அதிகாரிகளிடம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு முக்கியத் தகவல்கள் வெளிவந்ததாகத் தெரிகிறது.  இந்த விசாரணை காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com