
சென்னை மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் இன்று இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆம் தேதி முதல் சென்னை டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை இடையேயான புதிய மெட்ரோ வழித்தடத்தில் பயணிகளுக்கான மெட்ரோ சேவை தொடங்கப்பட்டது. இதையடுத்து இலவசமாக பொதுமக்கள் நேற்று இரவு வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்றும் சென்னை மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சைதாப்பேட்டை - சின்னமலை இடையே உயர்மின் அழுத்த மின்கம்பியில் ஏற்பட்ட பழுதால் ரயில்சேவை நேற்று மதியம் 12 மணி வரை பாதிக்கப்பட்டது. பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. நேற்று திங்கள்கிழமை மட்டும் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ள ரயில் நிர்வாகம், பொதுமக்களின் ஆர்வத்தை அடுத்தும், மெட்ரோ ரயில் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இன்றும் 3வது நாளாக இலவச சேவை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.