கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.387 கோடியில் புதிய கதவணை: முதல்வர் அடிக்கல் நாட்டினார்

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய கதவணை அமைக்கும் பணியை  தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில்  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி  அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார். 


கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய கதவணை அமைக்கும் பணியை  தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில்  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி  அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார். 
இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டம், வாத்தலை கிராமம், ஸ்ரீரங்கம் வட்டம் எலமனூர் கிராமங்களின் இடையே முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய கதவணை ரூ.387.60 கோடியில் அமைக்கப்பட உள்ளது. 
மேலும், கதவணை பாதிக்கப்படாமல் இருக்க பலப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இப் பணிகளை  முதல்வர் பழனிசாமி  அடிக்கல் நாட்டி தொடக்கிவைத்தார். இதன்மூலம், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் உள்ள புள்ளம்பாடி, பெருவாளை, அய்யன்வாய்க்கால்கள் மூலமாக 56 ஆயிரத்து 953 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் 12.01 லட்சம் ஏக்கர் பரப்புள்ள  காவிரி டெல்டா பாசன வசதிகள் உறுதி செய்யப்படும்.
புதிய தடுப்பணைகள், புனரமைப்புத் திட்டங்கள்: கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பேராம்பட்டு அணைக்கட்டு, திருவண்ணாமலை செய்யாற்றின் குறுக்கே அணைக்கட்டு, கடலூர் கடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை, கரூர் குடகனாற்றின் குறுக்கே தடுப்பணை, திருப்பூர் நல்லாற்றின் குறுக்கே தடுப்பணை, உப்பாற்றின் குறுக்கே தடுப்பணை, திருவள்ளூர் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை, சாத்தூர் உப்போடையின் குறுக்கே தடுப்பணைகளையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். கடலூர், பண்ருட்டி வட்டங்களில் புனரமைத்து சீரமைக்கப்பட்ட வெள்ளப்பாக்கம் கால்வாய், சிதம்பரத்தில் ரூ.25 கோடியில் வெள்ளத் தடுப்புப் பணிகள், காட்டுமன்னார்கோயிலில் மணவாய்க்கால், பழைய கொள்ளிடத்தில் வெள்ளச் சேதங்களை சீரமைக்கும் பணிகள், காஞ்சிபுரம் மாவட்டம், அடையாறு,வேகவதி ஆறுகளின் கரைப்பகுதிகளை புனரமைத்துப் புதுப்பிக்கும்  பணிகளையும்  முதல்வர் தொடக்கி வைத்தார்.மேலும், சென்னை ஆர்.கே.நகரில் வடக்கு பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே இருவழிப் பாலம், திண்டுக்கல் மாவட்டம், பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம், காஞ்சிபுரம் மாவட்டம், பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே ஒருவழிப் பாலம், தருமபுரி மாவட்டம், செங்கன்பசுவன்தலாவ் ஏரியில் இருந்து பிற ஏரிகளுக்கு நீரைக் கொண்டு செல்ல வரத்து கால்வாய், திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் முதல் எர்ணாவூர் வரை கடலரிப்பைத் தடுக்க தொடர் தூண்டில் வளைவுகள், திருநெல்வேலி மாவட்டம், திடியூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் வாய்க்கால் ஆகியவற்றையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
அடிக்கல் நாட்டுதல்: திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ள நீர் கால்வாய் அமைக்கும் பணிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய அணைக்கட்டு, கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சேலம், தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ள 27 தடுப்பணைகளுக்கும் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், என்.நடராஜன், சீ.வளர்மதி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com