தமிழகத்தில் புதிதாக 5 வருவாய் வட்டங்கள்:  முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் புதிதாக ஐந்து வருவாய் வட்டங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்தார். புதிய வட்டங்களைக்  காணொலிக் காட்சி மூலமாக, அவர் கடந்த செவ்வாய்க்கிழமை திறந்தார். இதுகுறித்து, தமிழக
தமிழகத்தில் புதிதாக 5 வருவாய் வட்டங்கள்:  முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
Published on
Updated on
1 min read


தமிழகத்தில் புதிதாக ஐந்து வருவாய் வட்டங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்தார். புதிய வட்டங்களைக்  காணொலிக் காட்சி மூலமாக, அவர் கடந்த செவ்வாய்க்கிழமை திறந்தார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-
கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த மாவட்டங்களில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின்படி, புதிய வருவாய் வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டத்தைப் பிரித்து செருப்பாலூரை தலைமையிடமாகக் கொண்டு திருவட்டார் வருவாய் வட்டமும், விளவங்கோடு வட்டத்தைப் பிரித்து கிள்ளியூர் வட்டமும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தைப் பிரித்து வத்திராயிருப்பு வட்டமும், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டத்தைப் பிரித்து குஜிலியம்பாறை வட்டமும், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டத்தைப் பிரித்து ஆர்.கே.பேட்டை வட்டமும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய வட்டங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி, பா.பென்ஜமின், க.பாண்டியராஜன், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கைவினைக் கலைஞர்கள் விருது: ஜவுளி, கைவினைப் பொருள்கள் தயாரித்தலில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் அரசின் சார்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, வாழும் கைவினைப் பொக்கிஷன் விருது, அ.சுப்ரமணியம் சிற்பி, செ.அப்துல்காதர், பொ.இசக்கியம்மாள், ஆ.கோபாலன் ஸ்தபதி, ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கோ.சிதம்பரம் ஆகிய ஏழு பேருக்கு முதல்வர் பழனிசாமி கடந்த செவ்வாய்க்கிழமை விருதுகளை அளித்தார். இந்த விருதுகள் தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும், 8 கிராம் தங்கப் பதக்கமும், ஒரு தாமிரப் பத்திரம், சான்றிதழ் அடங்கியதாகும்.
பூம்புகார் மாநில விருதுகள் கிருஷ்ணன், டி.என்.ஆறுமுகம், எஸ்.தெய்வானை, கே.சந்திரசேகர், எம்.அசோகன், எம்.விஜய், என்.முத்துமீனாட்சி, வி.ஆனந்த், குணவதி, டி.மாலா ஆகியோருக்கும் அளிக்கப்பட்டது. இந்த விருது ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசும், 4 கிராம் தங்கப் பதக்கம், தாமிரப் பத்திரம், சான்றிதழ் அடங்கியது.
பட்டு விவசாயிகளுக்கு பரிசு: மாநில அளவில் சிறந்த பட்டு விவசாயிக்கான முதல் பரிசு திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.விஸ்வநாதனுக்கும், 2-வது பரிசு கோவையைச் சேர்ந்த பி.சடையப்பனுக்கும், 3-வது பரிசு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பி.சாந்திக்கும் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பா.பென்ஜமின், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com