திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு 

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  அறிவித்துள்ளது. 
திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு 

சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாட்டில் 20 சட்டமன்ற தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்ட பின்னரும், தேர்தல் ஆணையம் இத்தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தாமல் தொடர்ந்து தள்ளிப் போட்டு வந்த நிலையில், தற்போது திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் அறிவித்துள்ளது. ஏற்கெனவே கஜா புயலால் பாதிக்கப்பட்ட இம்மாவட்ட மக்கள் நிவாரணம் கிடைக்காமல் பரிதவித்துக் கொண்டுள்ளனர். நிவாரணப்பணிகள் முழுமையடையவியல்லை. மேலும், பொங்கல் பண்டிகை விழாவும் உள்ள நிலையில் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் அறிவித்திருப்பது தேர்தல் ஆணையம் உள்நோக்கத்துடன் அறிவித்துள்ளதாக கருத வேண்டியுள்ளது.

மத்திய, பாஜக அரசு கடந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியில் இந்திய உழைப்பாளி மக்கள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை ஓட்டாண்டியாக்கி உள்நாட்டு,வெளிநாட்டு பெருமுதலாளித்துவ நிறுவனங்களை கொழுக்க வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அனைத்துத் துறையிலும் தோல்வி அடைந்துள்ள பாஜக அரசு மதவெறி கலவரங்களை நடத்துவதன் மூலம் தேர்தல் ஆதாயம் தேட முயற்சித்துக் கொண்டுள்ளது. தமிழகத்தில் உரிமைகள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்து தொடர்ந்து தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருகிறது. தமிழகமக்களின் நலன்களை காவு கொடுத்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மத்திய பாஜக அரசின் எடுபிடியாக அதிமுக அரசு செயல்படுகிறது.

இந்நிலையில், மத்திய பாஜகவையும், தமிழக அதிமுகவையும் வீழ்த்திட நடைபெறவுள்ள திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது. இத்தொகுதி வாக்காளப் பெருமக்கள் திமுக வேட்பாளருக்கு பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமெனவும், இதன் மூலம் தமிழகத்தில் புதிய எதிர்காலத்தை உருவாக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com