
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில், உரிய தகுதியில்லாதவர்கள் நியமிக்கப்பட்டது எப்படி என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் உரிய கல்வித் தகுதி இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறித்து மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் முத்துக்குமார் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, புகழேந்தி ஆகியோர், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றத் தேவையான கல்வித் தகுதி இல்லாதவர்களை நியமித்தது எப்படி? உயிர் பாதுகாப்புத் தொடர்பான பணிகளில் தகுதியில்லாதவர்களை நியமிப்பதா? என்று கேள்வி எழுப்பினர்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் பொருளாதாரம் படித்தவர் பணியாற்றி வருகிறார். அவர் வகிக்கும் பதவி, எம்பிபிஎஸ் படித்தவர் வகிக்கும் பதவியாகும். ஒரு மருத்துவர் வகிக்க வேண்டிய பதவியில் பொருளாதாரம் படித்தவர் நியமிக்கப்பட்டது எப்படி? அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, உரிய கல்வித் தகுதி இல்லாதவர்கள் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் பணியமர்த்தப்பட்டது எப்படி என்று தமிழக அரசிடம் பதிலை பெற்று ஜனவரி 8ம் திக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசு தரப்பு வழக்குரைஞருக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.