சங்கரன்கோவிலை தலைமை இடமாகக் கொண்டு வருவாய் கோட்டம் அமைத்திடுக! வைகோ 

சங்கரன்கோவிலை தலைமை இடமாகக் கொண்டு வருவாய் கோட்டம் அமைக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சங்கரன்கோவிலை தலைமை இடமாகக் கொண்டு வருவாய் கோட்டம் அமைத்திடுக! வைகோ 
Updated on
1 min read

சங்கரன்கோவிலை தலைமை இடமாகக் கொண்டு வருவாய் கோட்டம் அமைக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு, வருவாய் கோட்டம் அமைத்திட வேண்டும் என்ற மக்கள் கோரிக்கை நீண்ட காலமாகக் கிடப்பில் கிடக்கிறது. ஒரு வருவாய் கோட்டம் (Revenue Division) அமைப்பதற்குத் தேவையான அனைத்து மூலக் கூறுகளையும் உத்தேசமாக அமைக்கப்பட வேண்டிய ‘சங்கரன்கோவில் வருவாய் கோட்டம்’ பூர்த்தி செய்கிறது.

புதிதாக உருவாக்கப்பட வேண்டிய சங்கரன்கேவில் வருவாய் கோட்டத்தில் சங்கரன்கோவில், சிவகிரி, திருவேங்கடம் ஆகிய மூன்று வருவாய் வட்டங்கள் உள்ளன. இந்த மூன்று வருவாய் வட்டங்களும் முறையே
சங்கரன்கோவில் 545.02 ச.கி.மீ.
சிவகிரி 302.30 ச.கி.மீ.
திருவேங்கடம் 364.24 ச.கி.மீ.
என்ற அளவில் மொத்தம் 1211.56 ச.கி.மீ பரப்பளவு கொண்டதாகவும், இந்தப் பரப்பளவு சங்கரன்கோவிலைத் தலைமை இடமாகக் கொண்டு வருவாய் கோட்டம் அமைத்திடப் போதுமானதாகும்.

தவிர சங்கரன்கோவில், சிவகிரி, திருவேங்கடம் ஆகிய மூன்று வட்டங்களிலும் மொத்தம் 12 வருவாய் குறுவட்டங்களும் 100 வருவாய் கிராமங்களும் உள்ளன.
அதே போல் இம்மூன்று வட்டங்களிலும் 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி முறையே,
சங்கரன்கோவில் 2,19,199
திருவேங்கடம் 1,02.056
சிவகிரி 1,12,673
என்ற அளவில் மொத்தம் 4,33,928 மக்கள் தொகை (நான்கு இலட்சத்து முப்பத்தி மூன்றாயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தி எட்டு பேர்) உள்ளது. இவை அனைத்தும் வருவாய் கோட்டம் அமைக்கப் போதுமானது ஆகும்.

நெல்லையைத் தலைமையிடமாகக் கொண்டு தற்போது செயல்பட்டு வரும் வருவாய் கோட்டாட்சியர் அவர்களால் சங்கரன்கோவில், திருவேங்கடம் என்று சுமார் 100 கி.மீ. தூரம் கடந்து வந்து சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது நடைமுறையில் சிரமமான காரியமாகும். பொதுமக்களும் தங்கள் கோரிக்கைகளுக்காக நீண்ட தூரம் அலைந்து திரிய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதுபோன்ற சிரமங்களை களைந்திடும் வகையிலும் குறைந்தபட்சம் மூன்று வருவாய் வட்டங்கள் இருப்பின் அதனை ஒருங்கிணைத்து வருவாய் கோட்டம் அமைக்கலாம் என்ற விதியைப் பின்பற்றியும், பொதுமக்களின் நீண்ட கால விருப்பத்தை நிறைவேற்றிடும் வகையிலும் சங்கரன்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு வருவாய் கோட்டம் அமைத்திட தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சங்கரன்கோவிலை தலைமை இடமாகக் கொண்டு வருவாய் கோட்டம் அமைக்கலாம் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தமது 18.092015 ஆம் நாளிட்டு (ந.க.எண் ஆ/46619/2012) கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையாளர் சென்னை அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பரிந்துரை செய்துள்ளதை ஏற்று, மேலும் கால தாமதம் செய்யாமல், தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை அமைச்சர் அவர்கள் தனிக்கவனம் செலுத்தி
இக்கோரிக்கையை நிறைவேற்றித்தர முன்வருமாறு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com