
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லமான வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக வருமானவரித்துறையின் நிலைப்பாடு குறித்து பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில், போயஸ் தோட்டத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றப்படும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதன்படி நினைவு இல்லமாக மாற்றுவதற்கான ஆய்வுப் பணிகளை சென்னை மாநகராட்சியும், தமிழர அரசும் செய்து வருகின்றன. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியென அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு அரசு பல கோடி ரூபாய் செலவில் நினைவு இல்லம் கட்டுவது இயற்கை நீதிக்குப் புறம்பானது. எனவே வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான சொத்தை அரசு நினைவு இல்லமாக மாற்ற சட்ட ரீதியாக என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். அதேபோல் ஜெயலலிதா வருமான வரி பாக்கி ஏதாவது செலுத்த வேண்டியுள்ளதா, போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை ஆதரிக்கிறீர்களா அல்லது ஏதாவது ஆட்சேபம் உள்ளதா என்பது குறித்து வருமானவரித்துறையும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜனவரி 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.