
தினமணி பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், புகழ்பெற்ற தொல்லியல் அறிஞருமான ஐராவதம் மகாதேவனின் மறைவுக்கு சட்டப் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதற்கான இரங்கல் தீர்மானத்தை பேரவைத் தலைவர் ப.தனபால் வியாழக்கிழமை வாசித்தார். அதன் விவரம்:
இந்திய ஆட்சிப் பணியிலும், தினமணி நாளிதழின் ஆசிரியராகவும், உலகப் புகழ் பெற்ற தொல்லியல் அறிஞர்களில் ஒருவரும், சிறந்த கல்வெட்டு ஆய்வாளரும், பழந்தமிழ் இலக்கியத்தில் தோய்ந்து தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட கல்வெட்டுகளையும் ஆராய்ச்சி செய்தவர் ஐராவதம் மகாதேவன்.
சிந்து சமவெளி எழுத்துகளுக்கும், திராவிட மொழி குடும்பத்துக்கும் உள்ள உறவைச் சொன்னவரும், தொல்காப்பியர் விருது, பத்மஸ்ரீ போன்ற சிறந்த விருதுகளை பெற்ற பெருமைக்குரியவருமான மகாதேவன், கடந்த நவம்பர் 26-இல் காலமானார். அவர் மறைவுற்ற செய்தி அறிந்து பேரவை அதிர்ச்சியும், ஆழ்ந்த துயரமும் கொள்கிறது.
அவரது மறைவால் பிரிந்து வருந்தும் குடும்பத்தினருக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும், பத்திரிகைத் துறை, தொல்லியல் துறை சார்ந்த நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று பேரவைத் தலைவர் தனபால் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, இரண்டு நிமிடங்கள் மௌனம் அனுஷ்டிக்கப்பட்டது.