
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் திம்பம் மலைப் பாதையில் கடும் பனிப்பொழிவு காரணமாக, முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களை இயக்குகின்றனர்.
சத்தியமங்கலத்திலிருந்து மைசூரு செல்லும் சாலையில் அடர்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட திம்பம் மலைப் பாதை உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1,105 மீட்டர் உயரத்தில் உள்ளதால் இங்கு உதகை போலவே காலநிலை நிலவுகிறது. மாலை 6 முதல் மறுநாள் காலை 8 மணி வரை கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் பேருந்து, லாரி, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி ஊர்ந்து செல்கின்றன.
வெண்புகை மண்டலமாகக் காட்சியளிக்கும் திம்பம் மலைப் பாதையைக் கடந்து செல்ல கூடுதல் நேரம் ஆகிறது. சிறிய வாகனங்கள் பண்ணாரி, ஆசனூர் சோதனைச் சாவடிகளில் நின்று பனிமூட்டம் விலகிய பின்பு புறப்பட்டுச் செல்கின்றன.