
திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலைச் சந்திக்க எதிர்க்கட்சிகள் அச்சப்படுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
பெங்களூரு மத்திய சிறையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் சசிகலாவை, நடராஜனின் சகோதரர் சாமிநாதன் உள்ளிட்டோருடன் வியாழக்கிழமை சந்தித்த பிறகு, செய்தியாளர்களிடம் டி.டி.வி.தினகரன் கூறியது:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைப் போல் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தேர்தலை ஒருசில கட்சிகள் விரும்பவில்லை. ஆனால், அமமுக தேர்தலை வரவேற்கிறது. மக்கள் யார் பக்கம் என்பதை இடைத் தேர்தல் முடிவு வெளிப்படுத்தும்.
இடைத்தேர்தலில் அமமுக சார்பில் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து கலந்தாலோசிக்கவே சசிகலாவைச் சந்தித்தேன். அவரது ஆலோசனையின்படி தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை அறிவிப்போம்.
அதிமுகவுடன் அமமுகவை இணைப்பது தொடர்பாக யாருடனும் நான் பேச்சுவார்த்தை நடத்தவில்லை; அதற்கான அவசியமும் இல்லை.
எந்தக் காலத்திலும் துரோகிகளோடு சேர மாட்டேன். மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், மக்களவைத் தேர்தலில் அமமுக தனித்துப் போட்டியிடும்.
மக்களவை கூட்டத் தொடரில் அதிமுக எம்.பி.க்கள் நாடகம் நடத்தி வருகின்றனர்.
இந்த நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள். பண மதிப்பிழப்பு செய்த பிறகு கடந்த 2 ஆண்டுகளாக அமைதி காத்துவந்த பிரதமர் நரேந்திர மோடி, தற்போது மக்களவைத் தேர்தல் நெருங்குவதைத் தொடர்ந்து பொதுமக்களைச் சமாதானப்படுத்துவதற்காக அதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளார் என்றார்.