
திருவாரூர் இடைத் தேர்தலில் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 20 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்ட பின்னரும், அந்தத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தாமல் தள்ளிப்போட்டு வந்த தேர்தல் ஆணையம், தற்போது திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் அறிவித்துள்ளது.
ஏற்கெனவே கஜா புயலால் பாதிக்கப்பட்ட இந்த மாவட்ட மக்கள் நிவாரணம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். நிவாரணப் பணிகள் முழுமை அடையவில்லை. மேலும், பொங்கல் பண்டிகையும் வரவுள்ள நிலையில் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் அறிவித்திருப்பது தேர்தல் ஆணையம் உள்நோக்கத்துடன் அறிவித்துள்ளதாகக் கருத வேண்டியுள்ளது. இந்தச் சூழலில், மத்திய பாஜகவையும், தமிழக அதிமுகவையும் வீழ்த்திட நடைபெறவுள்ள திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.