
பிரதமர் மோடி எந்தத் தேதியில் தமிழகம் வந்தாலும், அவருக்கு எதிராக கருப்புக்கொடி அறப்போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை மதிமுக நிறைவேற்றியுள்ளது.
மதிமுக மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக் குழு, ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரதமர் மோடி எந்தத் தேதியில் தமிழகம் வந்தாலும் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கருப்புக்கொடி அறப்போராட்டம் நடத்துவது, காவிரியின் குறுக்கே மேகேத்தாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசை சட்டப்பூர்வமான முறையில் தடுத்து நிறுத்தவேண்டுமே தவிர, பேச்சுவார்த்தைக்கு தமிழகம் இசைவு அளிக்கக்கூடாது, ஒட்டுமொத்த மருத்துவக் கல்வியை வணிகம் ஆக்குவதற்கும், மத்திய அரசின் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கவும், மாநில உரிமைகளை நசுக்குவதற்கும் கொண்டு வந்துள்ள தேசிய மருத்துவ ஆணைய அவசரச் சட்டத்தையும், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட முன்வடிவையும் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 14 தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.