
பூமிக்கடியில் மின் கேபிளை அமைக்க சாத்தியமில்லை என் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மின்கோபுரத்திற்கு பதிலாக பூமிக்கடியில் மின் கேபிளை அமைக்க வேண்டும். உயர்மின்கோபுரம் அமைக்கும் திட்டத்தை இரண்டாக பிரித்து 400*2 கி.வாட் மின்சாரமாக பூமிக்கு அடியில் கொண்டு செல்ல வாய்ப்புள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, வளர்ந்து வரும் தமிழகத்தில் தேவை மின்சாரம் அதிகளவில் இருக்கிறது, உயர்மின் கோபுரம் அமைப்பதை தடுத்தால் போதுமான அளவு மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்காமல் சென்றுவிடும். இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் அனைவரும் விவசாயிகளிடம் எடுத்து சொல்ல வேண்டும், விவசாயிகளை வஞ்சிக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை.
புதைவட வழியாக மின்சாரம் கொண்டு செல்வது முடியாத காரியம். தொழில்நுட்ப வசதிகள் அந்தளவில் கண்டுபிடிக்கவில்லை. அதிகபட்சமாக 350 கிலோவாட் மின்சாரத்தை கொண்டு செல்லவே கேபிள் உள்ளது. விவசாயிகளின் பயிர்கள் போக, விளை நிலங்களுக்கும் போதுமான அளவு இழப்பீடுகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.