
பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் குறைக்கப்பட்டு லிட்டர் ரூ.71.01 ஆக உள்ளது. இதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 23 காசுகள் குறைக்கப்பட்டு லிட்டர் ரூ.65.91 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் முன்பு பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த 2017 ஜூன் மாதம் முதல் கைவிடப்பட்டது.
இதையடுத்து பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வந்தது. அந்த வகையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி முதல் வேகமாக உயர்ந்து அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10, டீசல் விலை ரூ.80.04 என புதிய உச்சத்தை தொட்டது. அதாவது, ஆகஸ்ட் 16 முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.6.86 வரையிலும், டீசல் லிட்டருக்கு ரூ.6.73 வரையிலும் விலை அதிகரித்தது.
இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வந்ததால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர்.
இதையடுத்து, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.1.50 குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதேபோல், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களும் லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
அதன்படி விலை குறைக்கப்பட்டதால், கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி, பெட்ரோல் விலை ரூ.81.50-ஆகவும், டீசல் விலை ரூ.72.95-ஆகவும் இருந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கத் தொடங்கியதால் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி, பெட்ரோல் விலை ரூ.82.83-ஆகவும், டீசல் விலை ரூ.75.69-ஆகவும் இருந்தது. மும்பையில் பெட்ரோல் விலை ரூ.88.29-ஐ தொட்டது.
அதன்பிறகு, சர்வதேச சந்தையிலும் கச்சா எண்ணெய் விலை சரிவு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு ஆகியவை காரணமாக, இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்க தொடங்கின.
கடந்த இரண்டரை மாதங்களில், டிசம்பர் 18-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசுகள் உயர்த்தப்பட்டது.
இதேபோல், டீசல் விலை கடந்த டிசம்பர் 17,18 ஆகிய தேதிகளில் முறையே 9, 7 காசுகள் உயர்த்தப்பட்டது. ஒட்டுமொத்தமாக, கடந்த இரண்டரை மாதங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.13.79 வரையிலும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.12.06 வரையிலும் குறைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த இரு தினங்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை ஆகி வந்த நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 21 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.71.01 ஆகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 23 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.65.91 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைவு இன்று வெள்ளிக்கிழை காலை (ஜன.4) முதல் அமலுக்கு வந்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...