
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழக மின்வாரிய தலைமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை செய்து, கணக்கில் வராத ரூ.1.15 லட்சம், தங்க நாணயங்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை அண்ணாசாலையில் தமிழக மின்வாரியத்தின் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தின் வளாகத்திலேயே மின்வாரியத்தின் தெற்கு மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்குள்ள சில அதிகாரிகள் புத்தாண்டையொட்டி, கீழ் நிலை அதிகாரிகளிடமும், ஒப்பந்ததாரர்களிடமும் லஞ்சமாக பணம், தங்க, வெள்ளி நகைகள், நாணயங்கள், பரிசுப் பொருள்கள் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
அந்தப் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், விசாரணை செய்தனர். இதில் அங்கு பணிபுரியும் சில அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது உறுதி செய்யப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.குமரகுரு தலைமையில் போலீஸார் புதன்கிழமை அந்த அலுவலகத்துக்கு சோதனை நடத்தச் சென்றனர்.
அவர்கள், சோதனையையொட்டி, அங்கிருந்த ஊழியர்கள் யாரையும் வெளியே விடவில்லை. மேலும் தெற்கு மண்டல தலைமை பொறியாளர் முத்து அறையிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்தனர். இச் சோதனை வியாழக்கிழமை காலை வரை நீடித்தது.
சோதனையின் முடிவில் அந்த அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.1.15 லட்சம் ரொக்கம், 18 கிராம் தங்க நாணயங்கள், வெள்ளி நாணயங்கள், பரிசுப் பொருள்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.