
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்பட முக்கிய பிரமுகர்களுக்கு சட்டப் பேரவையில் வியாழக்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதற்கான தீர்மானத்தை பேரவைத் தலைவர் ப.தனபால் வாசித்தார்.
சட்டப் பேரவை வியாழக்கிழமை காலை 10 மணிக்குக் கூடியதும், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவைத் தலைவர் ப.தனபால் வாசித்த தீர்மானங்கள்:
முன்னாள் பிரதமரும், 50 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய வாஜ்பாய் மறைவுற்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆற்றொணாத் துயரமும் கொள்கிறோம். சிறந்த பேச்சாளர். உயர்ந்த ஆட்சியாளர். கடின உழைப்பாளியாகவும், அனைவரிடமும் அன்பாகப் பழகும் தன்மையும் கொண்டவர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.
இதேபோன்று, தமிழகத்தின் முன்னாள் ஆளுநராக இருந்த பீஷ்ம நாராயண சிங், 85-வது வயதில் காலமானார். அவர் மத்திய, மாநில அமைச்சராகவும், தமிழக ஆளுநராகவும் பணியாற்றியவர். அவரது மறைவுக்கும் பேரவை இரங்கல் தெரிவிக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராகவும், மக்களவைத் தலைவராகவும் பணியாற்றியவர் சோம்நாத் சாட்டர்ஜி. அவரது மறைவுக்கு பேரவை அதிர்ச்சியும், ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது. தமிழகத்தின் நெல் ரகங்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நெல் ஜெயராமன் உடல் நலக் குறைவால் இறந்தார். வடசென்னைப் பகுதியில் 5 ரூபாய் டாக்டர் என்று அழைக்கப்பட்ட டாக்டர் ஜெயச்சந்திரனும் காலமானார். அவர்களுக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று, கஜா புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோருக்கும் இரங்கல் தீர்மானத்தை அவைத் தலைவர் ப.தனபால் வாசித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள்: சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்களாக இருந்த 12 பேரின் மறைவுக்கும் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, எஸ்.டி.உக்கம்சந்த் (மதுராந்தகம்). சி.கனகதாரா (பேரணாம்பட்டு), எஸ்.சண்முகநாதன் (ஆலங்குடி), சை.நாகூர்மீரான் (கடையநல்லூர்), சீ.வெங்கடேசன் (காவேரிப்பட்டினம்), பெ.மலைச்சாமி (மேலூர் வடக்கு), பரிதி இளம்வழுதி (எழும்பூர்), ரா.சந்திரசேகரன் (கம்பம்), கோ.வீரய்யன் (நாகப்பட்டினம்), எல்.சந்தானம் (சோழவந்தான், உசிலம்பட்டி), வி.ஜி.தனபால் (குடியாத்தம்), பி.எஸ்.உலகரட்சகன் (செய்யாறு) ஆகியோர் அண்மையில் உயிரிழந்தனர்.
அனைவருக்கும் இரங்கல் குறிப்புகளை பேரவைத் தலைவர் ப.தனபால் வாசித்தார்.
மறைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடங்கள் அமைதி காத்தனர். இதன்பின், அதிமுக எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ், திமுக உறுப்பினரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி ஆகியோருக்கு இரங்கல் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...