
வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக, சென்னையில் உள்ள பிரபல உணவகங்களில் வருமான வரித்துறையினர் வியாழக்கிழமை திடீர் சோதனை செய்தனர். இச் சோதனை 32 இடங்களில் நடைபெற்றது.
இது குறித்த விவரம்:
சென்னை வடபழனியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சரவணபவன் சைவ உணவகம் கடந்த 4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல சென்னையில் உள்ள பிரபலமான அசைவ உணவகமான அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸ், ஹாட் பிரட்ஸ் ஆகியவையும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக வருமானவரித்துறைக்கு புகார்கள் வந்தன.
அந்த புகார்களின் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் முதல் கட்ட விசாரணையில் ஈடுபட்டனர். இதில் அந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்கான சில ஆதாரங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த 4 நிறுவனங்களிலும் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை நடத்த திட்டமிட்டனர்.
அதன்படி, வடபழனியில் உள்ள சரவணபவன் உணவகத்தின் தலைமை அலுவலகம், கே.கே.நகரில் அந்த உணவகத்தின் வணிக அலுவலகம், அசோக்நகரில் உள்ள சரவணபவன் உணவகத்தின் நிறுவனர் ராஜகோபால் வீடு, கே.கே.நகரில் உள்ள அவரது மகன்கள் சிவகுமார், சரவணன் வீடுகள், சரவண பவன் உணவகத்தின் தலைமைச் செயல் அதிகாரி கணபதி வீடு ஆகியவற்றில் ஒரே நேரத்தில் சோதனை நடத்த வியாழக்கிழமை காலை 7 மணியளவில் வருமான வரித்துறையினர் வந்தனர்.
இது தவிர, சரவணபவன் உணவகத்துக்கு சொந்தமான ஐஸ்கிரீம் நிறுவனம், ஹோட்டல்கள் ஆகியவற்றிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இதேபோல தியாகராயநகர் தியாகராய கிராமணி தெருவில் உள்ள அஞ்சப்பர் உணவகத்தின் தலைமை அலுவலகம், அடையாறு காந்திநகரில் உள்ள கிராண்ட் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், அடையாறு காந்திநகர் இரண்டாவது பிரதான சாலையில் உள்ள ஹாட்பிரட்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஆகியவற்றிலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர்.
மேலும் இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் வீடுகள், அவர்களது கிட்டங்கிகள்,பிற நிறுவனங்கள் ஆகியவற்றிலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். மொத்தம் 32 இடங்களில் நடைபெற்ற இச் சோதனையில் சுமார் 120 வருமானவரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
முக்கிய ஆவணங்கள் பறிமுதல்: இச் சோதனையில் அந்த நிறுவன அலுவலகங்களில் வருமான வரி ஏய்ப்பு தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித்துறையினர் தெரிவித்தனர். இச் சோதனையின் காரணமாக, அந்த நிறுவனங்களின் வியாபாரம் பாதிக்கப்படவில்லை. அனைத்து இடங்களிலும் அந்த நிறுவனங்களின் கடைகள் வழக்கம்போல திறக்கப்பட்டு, செயல்பட்டன.
பெரும்பாலான இடங்களில் சோதனை இரவுக்குள் முடிவுக்கு வந்தாலும், ஒரு சில இடங்களில் வருமானவரித்துறையினரின் சோதனை நீடித்தது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்,பணம், நகைகள் குறித்த விவரங்களை சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னரே தெரிவிக்க முடியும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.